
பாட்னா: பொறுப்பற்ற நடத்தை காரணமாக தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை ஆறு ஆண்டுகளுக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ். மேலும் பிரதாப்புடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் தனது எக்ஸ் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், "தனிப்பட்ட வாழ்க்கையில் தார்மீக விழுமியங்களைப் புறக்கணிப்பது சமூக நீதிக்கான நமது கூட்டுப் போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது. எனது மூத்த மகனின் செயல்பாடுகள் பொறுப்பானதாகவும், எங்கள் குடும்ப விழுமியங்கள் மற்றும் மரபுகளுக்கு ஏற்றதாகவும் இல்லை. எனவே, நான் அவரை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் ஒதுக்கி வைக்கிறேன். இனிமேல் அவருக்கு கட்சியிலோ அல்லது குடும்பத்திலோ எந்த விதமான பங்கும் இருக்காது. அவர் கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் நீக்கப்படுகிறார். அவர், தனது சொந்த வாழ்க்கையின் நன்மை தீமைகளை காணும் திறன் கொண்டவர். அவருடன் உறவு வைத்திருப்பவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி முடிவுகளை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.