• May 25, 2025
  • NewsEditor
  • 0

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கான நான்கு இடங்களையும் குஜராத், பஞ்சாப், பெங்களூரு, மும்பை ஆகிய அணிகள் பிடித்துவிட்டாலும், அதில் முதல் இரண்டு இடங்களை எந்த அணி பிடிக்கப் போகிறது என்கிற சர்ப்ரைஸ் நீடித்த வண்ணமே இருக்கிறது.

இவ்வாறிருக்க, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் தனது இடத்தை உறுதி செய்யும் முனைப்பில் பஞ்சாப் அணி, ஏற்கெனவே பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட டெல்லியுடன் நேற்று (மே 24) மோதின.

ஷ்ரேயஸ் ஐயர் – டு பிளெஸ்ஸிஸ்

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் பவுலிங்கைத் தேர்வு செய்ய, பஞ்சாப் முதலில் பேட்டிங் இறங்கியது.

ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ஸ்டாய்னிஸின் அதிரடியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது பஞ்சாப்.

அதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி கருண் நாயர், சமீர் ரிஸ்வியின் சிறப்பான பேட்டிங்கால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த நிலையில், பஞ்சாப் பேட்டிங்கின்போது நடந்த ஒரு சம்பவத்தில் மூன்றாம் நடுவரின் முடிவு குறித்து அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா கடும் அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்.

அதாவது, பஞ்சாப்பின் பேட்டிங்கின்போது 15-வது மோஹித் சர்மா வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை கிரீஸிலிருந்த ஷஷாங் சிங் லாங் ஆன் திசையில் தூக்கியடிக்க பவுண்டரி லைனுக்கு அருகிலிருந்து கருண் நாயர் எகிறிப் பிடித்து பேலன்ஸ் இல்லாமல் அப்படியே உள்ளே தூக்கிப் போட்டார்.

ஆனால், அப்படி பந்தை உள்ளே தூக்கிப்போடும்போது தனது கால் பவுண்டரி லைனில் பட்டதாக அவரே சிக்ஸ் எனக் கைகளை உயர்த்திக் காட்டினார்.

ஆனால், அதை ரீபிளேயில் செக் பண்ண மூன்றாம் நடுவர், கருண் நாயரின் கைகளிலிருந்து பந்து வெளியேறும்போது அவரின் கால் பவுண்டரி லைனில் பட்டது போல் தெரியவில்லை என்று சிக்ஸ் தரவில்லை.

இதனால், அந்த பந்தில் ஷஷாங் சிங் ஓடியெடுத்த 1 ரன் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பிரீத்தி ஜிந்தா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “ஒரு உயர்மட்ட தொடரில் மூன்றாம் நடுவரிடம் நிறைய தொழில்நுட்ப வசதிகள் இருக்கும்போது இதுபோன்ற தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

இதுபோன்று மீண்டும் நடக்கக்கூடாது. போட்டி முடிந்த பிறகு கருண் நாயரிடம் நான் பேசினேன். நிச்சயம் அது சிக்ஸ்தான் என அவர் உறுதிப்படுத்தினார்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *