
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் வாத்து உரிமையாளரிடம் சென்சையாவும், அவரது மனைவி அனகம்மா ஆகியோர் தங்களது மூன்று மகன்களுடன் வாத்து மேய்த்து வந்துள்ளனர்.
சென்சையா தான் வேலை செய்த வாத்து உரிமையாளரிடம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அக்கடனை திரும்ப கொடுக்கும் முன்பு இறந்து போனார். சென்சையா வாங்கிய கடனுக்காக அனகம்மா தனது மகனுடன் சேர்ந்து கொத்தடிமையாக வேலை செய்து வந்தார்.
தினமும் அதிக நேரம் வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டு, குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டதால், வேலையை விட்டு செல்வதாக அனகம்மா தெரிவித்தார்.
சென்சையா வாங்கிய ரூ.25 ஆயிரத்தை வட்டியுடன் சேர்த்து, ரூ.45 ஆயிரமாக கொடுத்து விட்டு செல்லுமாறு வாத்து உரிமையாளர் கூறியுள்ளார்.
பணத்தை ஏற்பாடு செய்ய 10 நாள் அவகாசம் கேட்ட பெண்ணிடம், ஒரு மகனை அடமானமாக வைத்து விட்டு போ” என்று வாத்து உரிமையாளர் மிரட்டியுள்ளார்.
அனகம்மா வேறு வழியில்லாமல் ஒரு மகனை விட்டுவிட்டு மற்ற இரு குழந்தைகளை அழைத்துச் சென்றார். பணம் ஏற்பாடு செய்ய சென்ற அனகம்மா அடிக்கடி தனது மகனுடன் போன் செய்து பேசிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் போனில் பேசும்போது தன்னை வந்து அழைத்து செல்லும்படி மகன் கேட்டுக்கொண்டார்.
கடந்த மாதம் அனகம்மா வாத்து உரிமையாளரை தொடர்பு கொண்டு பணத்தை ஏற்பாடு செய்துவிட்டதாகவும், மகனை அழைத்து செல்ல வருவதாக குறிப்பிட்டார்.
வாத்து உரிமையாளர், மகனை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மருத்துவமனையில் தனது மகனை பார்க்கவேண்டும் என்று சொன்னபோது வாத்து பண்ணையில் இருந்து பையன் ஓடிவிட்டதாக வாத்து உரிமையாளர் மாறி மாறி பேசியுள்ளார்.
மகனுக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று பயந்த அனகம்மா சில பழங்குடியின தலைவர்களின் துணையோடு இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் தனிப்படை அமைத்து வாத்து உரிமையாளரிடம் விசாரித்த போது பையன் இறந்திருப்பது தெரிய வந்தது. பையன் இறந்தவுடன் அவனை காஞ்சிபுரம் அருகே புதைத்திருப்பதாக வாத்து உரிமையாளர் தெரிவித்தார்.
வாத்து பண்ணை பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பையனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
மேற்கொண்டு விசாரித்த போது பையன் மஞ்சள்காமாலையால் இறந்ததும், அதனை பையனின் தாயாரிடம் தெரிவிக்காமல் ரகசியமாக புதைத்துவிட்டதாகவும் தெரிய வந்தது.
இதையடுத்து வாத்து உரிமையாளர், அவரது மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.