• May 25, 2025
  • NewsEditor
  • 0

நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கான‌ ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு முதல் காற்றுடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, குடலூர் , பந்தலூர் என பரவலாக மழைப்பொழிவு காணப்படுகிறது.

சாலையில் விழுந்த மரம்

இன்றும் நாளையும் மிதமிஞ்சிய அளவில் மழைப்பொழிவு இருக்கலாம் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பரவலாக 1,378.4 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதிக பட்சமாக அவலாஞ்சியில் 215 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பேரிடர் அபாயகரமான 283 பகுதிகள் கண்டறியப்பட்டு , அந்த பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக தொட்டபெட்டா காட்சி முனை, ஊட்டி படகு இல்லம், லேம்ஸ் ராக், ஷீட்டிங் மட்டம், பைக்காரா உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொட்டபெட்டா

இன்றும் காற்றுடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. மக்களை பாதுகாப்புடன் இருக்க தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். மழை பாதிப்புகள் குறித்து 1077 என்கிற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *