
இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட ஆரம்பித்து இருக்கிறது.
மகாராஷ்டிராவில் கடந்த 10 நாள்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதுவும் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில்தான் அதிக அளவில் கொரோனாவின் தாக்கம் இருக்கிறது.
ஒரு வாரத்திற்கு முன்பு, மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக மும்பை அருகில் உள்ள கல்வா என்ற இடத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வாலிபருக்கு நீரிழிவு நோய் இருந்ததுள்ளது.
அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கல்வா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தபோது உயிரிழந்துவிட்டார்.
கடந்த 19-ம் தேதி மும்பை கே.இ.எம் மருத்துவமனையில் கொரோனாவிற்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர தனியார் மருத்துவமனை ஒன்றிலும் ஒருவர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அனைவரும் ஏற்கெனவே வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
மும்பை அருகில் உள்ள தானேயில் கடந்த 4 நாள்களில் கொரோனாவால் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மே மாதத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 207 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மும்பை சி.எஸ்.டி யில் உள்ள காமா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 30 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவை மாநில அரசு தொடங்கி இருக்கிறது.
பெங்களூருவில் 85 வயது நபர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். இது தவிர பெங்களூருவில் 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து பொது இடத்தில் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் முககவசம் அணிந்து செல்லும்படி மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் NB.1.8.1 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 66 பேருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா தமிழ்நாட்டில் மட்டுமே காணப்படுகிறது. குஜராத்தில் LF.7 ரக கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு உள்பட கர்நாடகா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, கர்நாடக அரசு மாநிலம் முழுவதும் இன்று முதல் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்கிறது.
கேரளாவில் அதிக பட்சமாக 273 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் 20 மாநிலங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.