
தனது பழைய அடையாளத்தை மறைத்து, மலேசியா வரும் போல்ட் கண்ணனுக்கு (விஜய் சேதுபதி) அறிவுக்கரசனின் (யோகிபாபு) அறிமுகம் கிடைத்து, அவர் வீட்டுக்குச் செல்கிறார். எதிர்வீட்டுப் பெண்ணான ருக்குவுக்கும் (ருக்மணி வசந்த்) போல்ட் கண்ணனுக்கும் காதல் மலர்கிறது. ருக்குவுக்கு வேலையைத் தக்கவைப்பதிலும் வீட்டை மீட்பதிலும் பிரச்சினை . அதற்காக போல்ட் கண்ணன் இரண்டு காரியங்களில் ஈடுபடுகிறார். அதனால் அவரை ஒரு பக்கம் வில்லன் கோஷ்டி, தேடி அலைகிறது. மறுபக்கம் மலேசிய போலீஸும் தேடுகிறது. இந்தப் பிரச்சினையிலிருந்து போல்ட் கண்ணன் மீண்டாரா, காதலியின் பிரச்சினை தீர்ந்ததா? என்பது கதை.
ஒருவருக்குப் பிரச்சினை என்றால் எந்த வழியிலாவது உதவி செய்ய வேண்டும் என்கிற கொள்கை உடைய நாயகனின் கதை இது. ஒன் லைன் ஈர்க்கும்படியாக இருந்தாலும், திரைக்கதையில் அதை சுவாரஸியமாகவும் ரசிக்கும்படியும் வழங்க இயக்குநர் ஆறுமுகக்குமார் மெனக்கெட்டிருக்கலாம்.