
`ஸ்மூத்தி’ வெயில், மழை, குளிர் என அனைத்து காலங்களுக்கும் ஏற்றது. பழங்களை ஜூஸாகக் குடிப்பதைவிட ஸ்மூத்தியாகச் செய்து அருந்தும்போது, முழுப் பலனைப் பெறலாம்.
ஸ்மூத்தியில், இரண்டுக்கும் மேற்பட்ட பழங்கள், உலர்ந்த பழங்கள், இயற்கை சுவையூட்டிகள் உள்ளதால், மல்ட்டி வைட்டமின் சத்துக்கள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.
கடைகளில் தயாரிக்கப்படும் ஸ்மூத்தியில் சர்க்கரை, பால் சேர்க்கப்படுகிறது. இது நல்லது அல்ல. வீட்டிலேயே பால் சேர்க்காமல், நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்த்து ஸ்மூத்தி தயாரிக்கும்போது, ஊட்டச்சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.
இளநீர் – திராட்சை ஸ்மூத்தி
தேவையானவை: இளநீர் – 1 கப், இளநீர் வழுக்கை – 1/4 கப், நாட்டுச்சர்க்கரை- தேவையான அளவு, ஊறவைத்த சப்ஜா விதை – 1 டீஸ்பூன், பச்சை திராட்சை – 3.
செய்முறை: இளநீர், இளநீர் வழுக்கை, நாட்டுச் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒருசுற்று சுற்ற வேண்டும். இதனுடன், சப்ஜா விதை, நறுக்கிய பச்சை திராட்சைகளைத் தூவிப் பறிமாறலாம்.
பலன்கள்: இளநீரில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுச்சத்துக்கள் உள்ளன. இவை வறண்ட சருமத்தைப் போக்கி, தோலைப் பளபளப்பாகும். சிறுநீரகத்தைச் சுத்திகரிக்கும். நா வறட்சியைப் போக்கும்; உடல்சூட்டைத் தணிக்கும். திராட்சையில் வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன. தாகத்தைத் தணிக்கும்; ரத்த விருத்திக்கு உதவும்.
பிளம்ஸ் – தக்காளி ஸ்மூத்தி

தேவையானவை: பழுத்த பிளம்ஸ் – 6, தக்காளி – 1, வெல்லப்பாகு – தேவையான அளவு, உலர் கிர்ணி விதை – 1 டேபிள்ஸ்பூன், நெய் – 1/2 டீஸ்பூன்.
செய்முறை: உலர் கிர்ணி விதையை நெய்யில் வறுத்து, பொடித்துக்கொள்ளவும். பிளம்ஸை நறுக்கி, கொட்டை நீக்கிக்கொள்ளவும். அத்துடன் தக்காளியைச் சேர்த்து, மிக்ஸியில் சிறிது நீர்விட்டு அரைத்து, வடிகட்டிக்கொள்ளவும். அதனுடன் வெல்லப்பாகு சேர்த்து, கிர்ணி விதைப் பொடியைத் தூவிப் பருகலாம்.
பலன்கள்: பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டாகரோட்டின் உள்ளன. பார்வைத் திறனை மேம்படுத்தும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும். இதயத்துக்கு நல்லது. உடல் புத்துணர்வு பெறும். தக்காளியில் வைட்டமின் ஏ, பி சிறிதளவும் கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவையும் உள்ளன. இவை ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, ரத்தசோகையைக் குணமாக்கும். உடலுக்கு உறுதியளிக்கும்.
பலா – ஆரஞ்சு ஸ்மூத்தி

தேவையானவை: பலாப்பழச் சுளைகள் – 3, கமலா ஆரஞ்சுச் சுளைகள் (உரித்தது) – 2, ஆப்பிள் பழம் – 2 துண்டுகள், கருப்பட்டிப் பாகு – தேவையான அளவு.
செய்முறை: பலாச் சுளைகளுடன் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் கருப்பட்டிப் பாகு கலக்க வேண்டும். மற்றொரு டம்ளரில் உரித்த ஒரு கமலா ஆரஞ்சு சுளையைப் போட்டு அதனுடன் பலாச் சாற்றை ஊற்ற வேண்டும். மேலே மீதமுள்ள கமலா ஆரஞ்சுச் சுளையைப் போட்டுப் பறிமாறலாம்.
பலன்கள்: பலாப்பழத்தில், வைட்டமின் சி, பி6, பொட்டாசியம் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ சிறிது உள்ளது. கண் நோய் வராமல் தடுக்கும். ஜீரண உறுப்புகளைச் சீராக்கும். இந்த ஸ்மூத்தியை, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
கிவி-குல்கந்து ஸ்மூத்தி

தேவையானவை: கிவிப்பழம் – 4, குல்கந்து – 2 டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் நறுக்கியது – 1 டேபிள்ஸ்பூன், நீரில் ஊறவைத்த சப்ஜா விதை – 1 டீஸ்பூன்.
செய்முறை: தோல் சீவிய கிவிப்பழத்தை குல்கந்து சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனுடன் ஊறிய சப்ஜா விதைகளைப் போட்டு, அரிந்த வாழைப்பழம் சேர்த்துப் பருக வேண்டும்.
பலன்கள்: கிவிப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, இ, நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சருமம் பளபளப்பாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தை விருத்தி செய்யும். மலச்சிக்கலைப் போக்கும்.
கொய்யா ஸ்மூத்தி

தேவையானவை: பழுத்த கொய்யாப்பழம் – 2, மாதுளை முத்துக்கள் – 1/2 கப், பனங்கற்கண்டு பொடித்தது – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கொய்யாப்பழத்தை கழுவி, நறுக்கிக்கொள்ள வேண்டும். அத்துடன் மாதுளை முத்துக்களைச் சேர்த்து, நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து, வடிகட்ட வேண்டும். இதனுடன், பனங்கற்கண்டு சேர்த்து, சில மாதுளை முத்துகளை மேலே தூவிப் பருகலாம்.
பலன்கள்: கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க்கு நல்ல பலன் தரும். மாதுளை விதைகளைச் சாப்பிட்டால், ரத்த விருத்தி ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.
பப்பாளி-தக்காளி ஸ்மூத்தி

தேவையானவை: தோல் மற்றும் விதை நீக்கிய பப்பாளித் துண்டுகள் – 2 கப், பழுத்த தக்காளி – 1, வெல்லப்பாகு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த கிர்ணி விதை – 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பப்பாளித் துண்டுகளையும் தக்காளிப் பழத்தையும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். அத்துடன் வெல்லப்பாகு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். இதில் கிர்ணி விதைகளைத் தூவிப் பரிமாறலாம்.
பலன்கள்: பப்பாளி குறைவான கலோரி கொண்டது. வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. பார்வைத்திறன் மேம்பட, சருமத்தின் ஆரோக்கியத்துக்கு இந்த ஸ்மூத்தி உதவும். 100 கிராம் பப்பாளியில் மட்டும் ஒருநாளுக்கு தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடுகிறது. தக்காளியிலும் வைட்டமின் சி உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். இதில், பயோட்டின் உள்ளதால், சருமம், முடி வளர்ச்சிக்கு உதவும்.
டிரை ஃப்ரூட்ஸ் ஸ்மூத்தி

தேவையானவை: உலர்ந்த திராட்சை – 1 கப், உலர்ந்த அத்திப்பழம் – 4, பேரீச்சம்பழம் – 5, பேரீச்சம்பழ சிரப் – 2 டேபிள்ஸ்பூன், வால்நட் – 2, உலர்ந்த பாதாம் – 2, ஏலக்காய் – 1.
செய்முறை: உலர்ந்த திராட்சை, கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், வால்நட், பாதாம், அத்திப்பழத்தை நீரில் சில மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து, ஊறவைத்தவற்றை அதில் போட்டுக் கொதிக்கவிட வேண்டும். ஆறிய பின், அதை மிக்ஸியில் போட்டு, ஏலக்காய் சேர்த்து, அரைத்து வடிகட்ட வேண்டும். பிறகு, இதனுடன் பேரீச்சம் சிரப் கலந்து, உலர்ந்த திராட்சையை மேலே தூவிப் பருகலாம்.
பலன்கள்: இதில், புரதச்சத்து, ஒமேகா 3, வைட்டமின்கள் ஏ, பி, தாமிரம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளன. ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். ரத்தசோகையைப் போக்கும். உடலுக்கு வலுவைத் தரும். எடையை அதிகரிக்க விரும்புபவர்கள், குழந்தைகள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
மாதுளை – ரோஜா இதழ் ஸ்மூத்தி

தேவையானவை: மாதுளை முத்துகள் – 1 கப், பன்னீர் ரோஜா இதழ்கள் – 2 டேபிள்ஸ்பூன், தேன் – 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மாதுளையுடன் சிறிதளவு நீர்விட்டு, ரோஜா இதழ் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன், தேன் கலந்து, சிறிது ரோஜா இதழ்களைத் தூவிப் பரிமாறலாம்.
பலன்கள்: மாதுளையில் வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. பித்தம், குடல்புண், தொண்டை வறட்சி, புளித்த ஏப்பம், வாந்தி, உடல் சோர்வு ஆகியவற்றைப் போக்கும். எலும்புகள், பற்களை உறுதிப்படுத்தும். பன்னீர் ரோஜா இதழ்கள் தாகம், வெள்ளைப்படுதல் ஆகியவற்றைக் குணமாக்கும். இது மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. மாதுளை விதைகள் ரத்தத்தைப் பெருக்கும். இதயத்துக்கு வலுவூட்டும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
கிர்ணி – பாதாம் ஸ்மூத்தி

தேவையானவை: கிர்ணிப்பழம் சிறியது – 1, நீரில் ஊறவைத்த பாதாம் பருப்பு – 5, வெல்லப்பாகு – தேவையான அளவு, காய்ந்த கிர்ணிப்பழ விதைகள் – 1 டீஸ்பூன்.
செய்முறை: வெல்லத்தில் சிறிது நீர் விட்டுக் காய்ச்சி, வெல்லப்பாகாக்கி, வடிகட்டி வைத்துக்கொள்ளவும். பாதாம் தோலை உரித்து, நறுக்கிய கிர்ணிப்பழத்தை உடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதில் வெல்லப்பாகு சேர்த்துக் கலந்து, கிர்ணி விதையைத் தூவிப் பருகலாம்.
பலன்கள்: கிர்ணிப்பழத்தில் புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து நிறைவாக உள்ளன. உடலுக்கு குளிர்ச்சி தரும். சோர்வை நீக்கி, சக்தியைக் கொடுக்கும். வைட்டமின் பி, சி ஓரளவு இருப்பதால், வயிற்றுப்புண்ணுக்கு நல்லது. பாதாமில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளன. மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இதயக் கோளாறுகள், ரத்தசோகை, பித்தப்பைக்கல் போன்ற பிரச்னைகள் கட்டுப்படும்.