
நாட்டிலுள்ள நகர்ப்புற மேம்பாட்டுக்கு பெருமளவு நிதி கொண்ட பெரிய திட்டம் அவசியம் என்றும் மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சமத்துவம் மற்றும் சமூகநீதி அடிப்படையில், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிதான் எங்களின் தொலைநோக்குப் பார்வை. “எல்லோர்க்கும் எல்லாம்” என்ற அந்தக் குறிக்கோளுக்குப் பெயர்தான் திராவிட மாடல். எங்கள் அரசில் வரும் 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை இலக்காக நிர்ணயித்து செயலாற்றி வருகிறோம். அதன் பயன்கள்தான் வளர்ச்சிக் குறியீடுகளாக எதிரொலிக்கின்றன.