‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். இன்றைய தினம் சென்னை சாய் ராம் கல்லூரியில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவை நடத்தி வருகின்றனர். படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.

சிம்பு பேசுகையில், “இந்தப் படத்துல நானும் கமல் சாரும் குடையைப் பிடிச்சிட்டு போவோம். நான் அந்தக் காட்சியில கமல் சார் குரல்ல பேசணும். கமல் சாரைப் பக்கத்துல வச்சிட்டு நான் எப்படி பேசுறதுனு இருந்தேன். மணி சார் மைக்ல ‘சிம்பு, ஏன் டைலாக் பேசல’னு கேட்டாரு. கமல் சார் அதுக்குப் பிறகு இப்படி பேசுங்கனு சொன்னாரு. கமல் சார் கழுத்தை நான் பிடிச்சிட்டு இருக்கிற மாதிரி ஒரு ஷாட் டிரெய்லர்ல இருக்கும். அந்தக் காட்சியில நீங்க சரியாக கழுத்தை பிடிக்கலனு சொன்னாரு. அவர் ஜாலியாகச் சொல்லிட்டாரு.
எப்படி கமல் சார் கழுத்தைப் பிடிக்கிறது. இன்னொரு முறை கழுத்தை சரியாகப் பிடிக்கலைனா மணி சார் நம்ம கழுத்தைப் பிடிச்சிடுவார்னு நினைச்சேன். அந்தக் காட்சியில கமல் சார் நடிக்கிறதைப் பார்த்து உண்மையாக நான் இறுக்கமாக பிடிச்சிருக்கேன்னு நினைச்சுட்டேன். சாரி கமல் சார்! கமல் சார்கூட பணிபுரிந்த பயணம் ரொம்பவே அற்புதமானது. இந்த மேடையில என்னுடைய தந்தை டி.ராஜேந்திரனுக்கும், உஷா ராஜேந்திரனுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கித் தருவாங்க. ஆனா, சின்ன வயசுல இருந்து எனக்கு நடிக்கச் சொல்லிக் கொடுத்தாங்க.

நான் எமோஷனல் ஆகிட்டேன்
அப்போ ஒரு பக்கம் ஷூட்டிங் போயிட்டு படிக்கிறதுக்கு கஷ்டமாக இருக்கும். நடிக்கிறதுக்கு சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். அப்போ நம்மை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்துறாங்கனு நினைச்சிருக்கேன். இந்த விழாவுக்கு அப்பா வரவேண்டாம். அவர் எமோஷனல் ஆகிடுவார்னு நினைச்சேன். ஆனா, நான் எமோஷனல் ஆகிட்டேன், சாரி! படத்துல நான்தான் இனிமேல் இங்க ரங்கராய சக்திவேனு ஒரு வசனம் இருக்கு. அந்த வசனம் வந்ததுக்குப் பிறகு சோசியல் மீடியாவுல நான்தான் கமல் சாருக்கு அப்புறம்னு போடுறீங்க. ‘தேவர்மகன்’ படத்துக்குப் பிறகு சிவாஜி சார் இடத்தை கமல் சார் பிடிச்சிட்டதாக கிடையாது. முதல்ல அதை நம்ம புரிஞ்சுக்கணும்.
சிவாஜி சார் ஒரு லெஜெண்ட். அவர் இடத்தை யாரும் பிடிக்க முடியாது. நம்ம நினைச்சு பார்க்க முடியாத கதாபாத்திரங்கள் கமல் சார் பண்ணியிருக்கார். அந்த இடத்துல நம்ம ஈஸியாக வந்திட முடியாது. கமல் சார் சமீபத்துல ‘இனிமேல் வர்றவங்க என்மேல் ஏறிப் போங்க. என் தோள்ல உங்களை தூக்கி விடுறேன்’னு சொல்லியிருந்தாரு. அந்த மாதிரி கமல் சார் மேல ஏறி மதிச்சுதான் போறோம். மிதிச்சு போகல. அப்படியான ஒரு பெருந்தன்மை யாருக்கும் வராது. எனக்கு இந்த இடத்தைக் கொடுத்திருக்கீங்க.

‘தக் லைஃப்’ தொடக்கம்
அதுக்காக உழைச்சு நான் இன்னும் மேல வருவேன். ரசிகர்கள்கிட்ட உங்களை பெருமைப்படுத்துற மாதிரி நடந்துப்பேன்னு சொன்னேன். அதுக்கு ‘தக் லைஃப்’ தொடக்கம். கொஞ்சம் தாமதமாகிடுச்சு. இனி சரியாக படங்கள் வரும். எப்படி உங்களுக்கு நேர்மையான ரசிகர்கள் இருக்காங்கனு கேட்பாங்க. 2 நல்லவங்க இருக்கிறதுனாலதான் இந்த உலகம் இயங்கிட்டு இருக்கு. அவங்க என் ரசிகர்களாகவும் இருக்காங்க. அப்படியான நல் உள்ளங்கள் எனக்கு ரசிகர்களாக அமைஞ்சதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.” என்றார்.