
புதுடெல்லி: எஸ்எஸ்ஏ திட்டத்துக்கான நிதி விடுவிப்பு முதல் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுதல் வரை, தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். டெல்லியில் இன்று (மே 24) நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் விவரம்:
> உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் – கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை நகரம், கலை பண்பாட்டிற்கு தலைநகராக விளங்கும் மதுரை ஆகிய இரு நகரங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கேற்ப, செயல்திறன்மிக்க பொது போக்குவரத்து அமைப்புகளை உருவாக்குவது அவசியமாகிறது. இதன் அடிப்படையில், மெட்ரோ ரயில் திட்டத்தினை அறிமுகப்படுத்த தமிழக அரசு உத்தேசித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரித்துள்ளது.