
தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் சார்பில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கோவை மாவட்டத்துக்கு தேசிய மீட்புப் படை மற்றும் மாநில மீட்புப் படை குழுவினர் வருகை புரிந்துள்ளனர்.
இதையடுத்து மழை கால பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மழை கண்காணிப்பு அலுவலர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர்,

மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு பணிகளும் நடைபெற்றது.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோவை ஆட்சியர் பவன்குமார், “கோவை மாவட்டத்தில் இன்று முதல் 26-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மழையால் விழும் மரங்களை அகற்ற இயந்திரங்கள், ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் தேங்கியுள்ள நீரை அகற்றுவதற்கான மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வால்பாறை மற்றும் டாப்ஸ்லிப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். அங்கு அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படையினர் 80 பேர் இரண்டு குழுக்களாக பிரிந்து முகாமிட்டுள்ளனர்.

மேலும், மழை குறித்த பாதிப்புகளை பொதுமக்கள் 1077 என்கிற அவசர கால உதவி எண்ணுக்கும், மாவட்ட நிர்வாகத்தையும் (0422 2301114), கோவை மாநகராட்சி (0422 2302323, வாட்ஸஅப் 8190000200) தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
மாநகர் பகுதிகளில் உள்ள 6 மேம்பாலங்களில் தேங்கும் தண்ணீரை அகற்ற மோட்டார் பாம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிவாரண முகாம் அமைக்க உள்ளோம். மாவட்டம் முழுவதும் 40 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. வால்பாறை நிலச்சரிவு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய 3 குழுக்குள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. தவறான தகவல்கள் பரப்புவோர் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.