• May 24, 2025
  • NewsEditor
  • 0

நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், 2047ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் மாநில அரசின் பங்கு குறித்து நிதிஆயோக் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, மாநில முதல்வர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய விஷயங்கள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

MK Stalin

மாநிலங்களுக்கான பங்கு 50 % உயர்த்தி வழங்கப்பட வேண்டும்

“கடந்த 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள். ஆனால் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி, பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. மத்திய அரசின் வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 விழுக்காடு உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு மறுப்பு

‘P.M.SHRI’ திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, ஆசிரியர்களின் பயிற்சி, கல்விப் பொருள்கள் மற்றும் இதர கல்வித் திட்டங்களைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, 2024-2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி, ஒருதலைபட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.

திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும்

தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும்.

இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள்.

நகர்ப்புற மேம்பாட்டின் அவசியம்

நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம். இந்தியாவிலேயே தமிழ்நாடு மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக இருப்பதால் நகர்ப்புற மேம்பாட்டின் அவசியம் குறித்து கோரிக்கை வைத்தேன்” என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *