• May 24, 2025
  • NewsEditor
  • 0

உத்தரப்பிரதேசத்தில் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் ரயில்வே ஊழியர் 30 ஆண்டுகள் கழித்து தனது வேலை பறிபோக காரணமாக இருந்த சி.பி.ஐ அதிகாரியை பழிவாங்கி இருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் சி.பி.ஐ. அதிகாரியாக பணியாற்றுபவர் விரேந்திர சிங். நேற்று விரேந்திர சிங் தனது அலுவலகத்திற்கு வெளியில் வந்த போது அவரது நெஞ்சை அம்பு ஒன்று வந்து தாக்கியது. போரில் அம்பால் தாக்குவது போன்று விரேந்திர சிங் நெஞ்சை அம்பு வந்து தாக்கியது. இதில் விரேந்திர சிங் தரையில் சுருண்டு விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விரேந்திர சிங் மீது அம்பு கொண்டு தாக்கிய தினேஷ் முர்மு என்பவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

தாக்கப்பட்ட விரேந்திர சிங்

லக்னோவில் சி.பி.ஐ அலுவலகம் மக்கள் நெருக்கடி மிகுந்த இடத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட இடத்தில் சி.பி.ஐ அலுவலகத்திற்கு வெளியில் நின்ற மரத்திற்கு அடியில் நீண்ட நேரம் காத்திருந்து விரேந்திர சிங் மீது சரியாக அம்பு கொண்டு தினேஷ் முர்மு தாக்கி இருக்கிறார். பிடிபட்ட தினேஷிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அம்புவால் தாக்கப்பட்ட விரேந்திர சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிர்ஷ்டவசமாக விரேந்திர சிங் இத்தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார்.

தினேஷ் விட்ட அம்பு விரேந்திராவின் இடது நெஞ்சு பகுதியில் 5 சென்டிமீட்டர் ஆழத்திற்கு பதிந்து இருந்தது. இதுவே சற்று தள்ளி வலது புறத்தில் தாக்கி இருந்தால் இருதயத்தை துளைத்திருக்க வாய்ப்பு இருப்பதாக விரேந்திராவிற்கு சிகிச்சை கொடுத்து வரும் டாக்டர் ராஜேஷ் தெரிவித்தார். விரேந்திராவிற்கு இதற்கு முன்பு எதாவது மிரட்டல் வந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட தினேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது தாக்குதலுக்கான காரணம் தெரிய வந்தது. தினேஷ் ரயில்வேயில் ஜூனியர் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். 1993ம் ஆண்டு ரயில்வேயில் நடந்த ஊழல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தினேஷ் ரயில்வே வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்த ஊழலை விசாரணை செய்ததில் விரேந்திராவும் இடம் பெற்றுள்ளார். விரேந்திராதான் தனது வேலை பறிபோக காரணம் என்று தினேஷ் கருதினார். பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த தினேஷ் வேலையில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சொந்த ஊருக்கு சென்றார். அங்கு மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அதன் பிறகுதான் தனது வேலை பறிபோக காரணமாக இருந்த சி.பி.ஐ அதிகாரி விரேந்திராவை பழி வாங்க முடிவு செய்தார்.

வில் அம்பு

இதற்காக அவர் கடந்த பல ஆண்டுகளாக வேலை செய்திருக்கவேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து போலீஸார் கூறுகையில்,”தினேஷ் வில் அம்பு தயாரித்து அதனை கொண்டு பல மாதம் பயிற்சி எடுத்திருக்கவேண்டும். ஆள் நடமாட்டம் இல்லாமல் வனப்பகுதியில் அவர் இந்த பயிற்சியில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று கருதுகிறோம். அதோடு சி.பி.ஐ. அதிகாரி எப்போது அலுவலகம் வருகிறார் என்பதையும் பல நாள் கண்காணித்து இருக்கவேண்டும். அதன் பிறகுதான் இத்தாக்குதலில் ஈடுபட்டு இருக்கிறார். அவருக்கு வில் அம்பு செய்ய யாராவது உதவி செய்தார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

வேலை பறிபோன கோபத்தில் 30 ஆண்டுகள் கழித்து சி.பி.ஐ. அதிகாரியை ரயில்வே ஊழியர் பழி வாங்கி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. தினேஷ் மீது கொலை முயற்சி, அரசு அதிகாரியை வேலை செய்ய விடாமல் தடுத்தது, ஆயுதத்தடுப்பு உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *