• May 24, 2025
  • NewsEditor
  • 0

திமுகவுக்கு அதிர்ச்சி ரிப்போர்ட்

அமைச்சர் பதவியை பறிகொடுத்தாலும், செந்தில் பாலாஜிக்கு மேற்கு மண்டல பொறுப்பாளர் என்கிற பவர்ஃபுல்லான பதவியை திமுக தலைமை கொடுத்துள்ளது. ஏற்கெனவே கோவை, கரூர் மாவட்டங்கள் அவரின் கன்ட்ரோலில் இருந்த நிலையில், தற்போது திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகள் பொறுப்பில் விடப்பட்டுள்ளன.

செந்தில் பாலாஜி

அமைச்சராக தன்னுடைய கடைசி நாள் (ஏப்ரல் 27) கோவையில் தான் இருந்தார். அப்போது கோவையில் இருந்து புறப்பட்ட அவர், மே 22-ம் தேதி அதே கோவைக்கு மேற்கு மண்டல பொறுப்பாளராக வருகை புரிந்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளைச் சேர்ந்த திமுக மாவட்ட செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பில் இருப்பவர்களிடம் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

கோவை
கோவை

காலை கோவை திமுக வடக்கு மாவட்டம், மதியம் கோவை திமுக தெற்கு மாவட்டம், மாலை கோவை மாநகர் மாவட்டம் என்று அந்தந்த மாவட்டத்துக்குட்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் திமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.

`10 தொகுதிகளில் ஒன்று கூட திமுகவுக்கு சாதகமாக இல்லை’

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 2001 சட்டமன்ற தேர்தலில் பூஜ்ஜியம், 2006 சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகள், 2011 சட்டமன்ற தேர்தலில் பூஜ்ஜியம், 2016 சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதி, 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பூஜ்ஜியம் என்று திமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

மேலும் அதிமுக, பாஜக கூட்டணி உருவாகியிருப்பது மற்ற மாவட்டங்களில் எப்படி இருந்தாலும், கோவை உள்ளிட்ட கொங்கு பகுதியில் அது பலமான கூட்டணி.

பாஜக – அதிமுக கூட்டணி

இங்கு அதிமுக, பாஜக இரண்டுமே சற்று வலுவாக தான் உள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜி 10 தொகுதிகளிலும் ஒரு ரகசிய சர்வே எடுத்துள்ளார். அவற்றில் 10 தொகுதிகளில் ஒன்று கூட திமுகவுக்கு சாதகமாக இல்லை என்ற அதிர்ச்சி ரிப்போர்ட் கிடைத்துள்ளது.

இதனால் தொகுதி வாரியான ஆலோசனை கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி மிகவும் கறாராக, “சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் நிறைய வித்தியாசம் உள்ளது. சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை கடந்த காலங்களில் கோவை நமக்கு சாதகமாக இருந்ததில்லை. இந்தமுறை இங்கு எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

கோவை

உள்கட்சி பூசல்..

கடந்த கால தோல்விகளுக்கு நம்மிடம் உள்ள உள்கட்சி பூசல் தான் முக்கிய காரணம். இந்தமுறை உங்களின் தனிப்பட்ட ஈகோவுக்கு எல்லாம் இங்கு இடமில்லை. அதை எல்லாம் அகற்றிவிட்டு மக்களை சந்தித்து பணியாற்றத் தொடங்குங்கள். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக விரைவில் நகர, ஒன்றிய, பேரூர், பகுதி கழகங்கள் பிரிக்கப்படவுள்ளன.

உங்களுக்கு யாரை பிடித்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் அதை எல்லாம் ஓரம் வைத்துவிட்டு புகார் வராமல் பணியாற்ற வேண்டும். புகார் வந்தால் யாராக இருந்தாலும் நீக்கப்படுவார்கள். அது மாவட்டச் செயலாளர்களாவே இருந்தாலும் சரி, நான் சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் கட்சி வேடிக்கை பார்க்காது. தலைமையாக முடிவு எடுத்து சில மாற்றங்களை செய்யவுள்ளது. உங்கள் பூத்துக்கு நீங்கள் தான் பொறுப்பு.

செந்தில் பாலாஜி

அங்கு கட்சிக்கு அதிக வாக்கு வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்றால் இப்போதே எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடலாம்.” என்று ஸ்ட்ரிக்டாக சொல்லவே உடன்பிறப்புகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சில உடன்பிறப்புகள் இந்தக் கூட்டத்திலும் புகார் மனுக்களை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களை எல்லாம் செந்தில் பாலாஜி கடுமையாக எச்சரித்து அனுப்பிவிட்டாராம்.

`தொண்டாமுத்தூர் சரிவுக்கு..’

மேலும் தொகுதி வாரியாக உள்ள பிரச்னைகளையும் செந்தில் பாலாஜி புட்டு புட்டு வைத்தாராம். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதி குறித்து செந்தில் பாலாஜி பேசும்போது, “தொண்டாமுத்தூரில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறோம். அங்கு யார் யார் அதிமுகவினருடன் கைக்கோர்த்து செயல்பட்டனர் என்ற பட்டியல் உள்ளது. காப்பாற்றப்பட வேண்டும் என்பவர்கள் அவரவர் பகுதியில் கவனம் செலுத்தி பணியாற்றுங்கள்.

தொண்டாமுத்தூர் தொகுதி

இல்லையென்றால் ஒதுங்கிவிடுங்கள். அதேபோல 10 தொகுதிகளில் பொள்ளாச்சியில் தான் கோஷ்டி பூசல் அதிகம் உள்ளது. அங்கு ஒன்றிணைந்து பணியாற்றுங்கள். சூலூர் தொகுதியில் கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது. அங்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.” என்று 10 தொகுதிகளிலும் உள்ள பிரச்னைகளை சொல்லி எச்சரித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *