
சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ.823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் திட்டப்பணிகளுக்காக, அங்கிருந்த பேருந்து நிலையத்தை தற்காலிகமாக ராயபுரத்தில் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை மாநகரின் பிராட்வே பேருந்து நிலையம் பழமையானது. தினந்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதை ரூ.823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக மாற்றும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட உள்ளன. பின்னர் அங்கு 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதேபோன்று பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது.