
புதுடெல்லி: கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அவ்வாறு தொடங்கினால், கேரளாவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கத்தைவிட ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கியதாக அமையும்.
சாதகமான சூழல்: கடந்த இரண்டு தினங்களாகவே அரபிக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதனால் அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, பருவமழைக்கு முந்தைய மழைப்பொலிவும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவருகிறது. இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்துக்குள் தொடங்குவதற்கான அனைத்து சாதகமான சூழலும் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.