
கேஜெஆர் ஸ்டூடியோஸ் சார்பில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ, டாக்டர், அயலான் உள்பட சில படங்களைத் தயாரித்தவர் கேஜெஆர் ராஜேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘அங்கீகாரம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ஜேபி. தென்பாதியான் இயக்குகிறார். ஸ்வஸ்திக் விஷன்ஸ் சார்பில் பிரசாந்த் – அஜித் பாஸ்கர் – அருண்முருகன் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதில், சிந்தூரி விஸ்வ நாத், விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன் ராம் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குநர் ஜேபி தென்பாதியான் கூறும் போது, “தென்சென்னையில் உள்ள மாட்டான்குப்பன் பகுதியில் நடக்கும் கதை. ஒரு காலத்தில் அங்கு ஏராளமான விளையாட்டு வீரர்கள் இருந்தார்கள். இன்று விளையாட்டில் இருந்து அந்தக்குப்பம் விலகி இருக்கிறது. அங்கிருந்து தேசிய அளவில் சாதிக்க நினைக்கிற ஒரு அத்லெட் சந்திக்கும் சவால்களும் பிரச்சினைகளும்தான் திரைக்கதை. பல உண்மைச் சம்பவங்களை கொண்டு உருவாக்கி இருக்கிறேன். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது” என்றார்.