• May 24, 2025
  • NewsEditor
  • 0

‘பெங்களூர் vs சன்ரைசர்ஸ்!’

பெங்களூருவுக்கும் ஹைதராபாத்துக்கும் இடையிலான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. பெங்களூரு அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. 230+ டார்கெட்டை சேஸ் செய்கையில் ஒரு கட்டம் வரைக்கும் ஆர்சிபி அணி சேஸிங்கில் நல்ல நிலையில்தான் இருந்தது. 15 ஓவர்கள் வரைக்கும் போட்டி சமநிலையில்தான் இருந்தது. கடைசி 5 ஓவர்களில்தான் போட்டியே மாறியது. பெங்களூரு அணி எங்கே கோட்டைவிட்டது?

RCB vs SRH

சன்ரைசர்ஸ் அணிக்கு இந்தப் போட்டியின் மூலம் பெரிதாக எதுவும் கிடைக்கப்போவதில்லை. இழப்பதற்கும் ஒன்றும் இல்லை. ஆனால், ஆர்சிபிக்கு புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்துக்குள் இருக்க இந்தப் போட்டி ரொம்பவே முக்கியம். இதுவே சன்ரைசர்ஸூக்கு கூடுதல் தெம்பை கொடுத்தது. முழு நம்பிக்கையோடு எந்த அழுத்தமும் இல்லாமல் அவர்களின் அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆடினார்கள்.

‘இஷன் கிஷன் அசத்தல்!’

சன்ரைசர்ஸ் அணிதான் முதலில் பேட்டிங் செய்தது. பவர்ப்ளேயில் அபிஷேக் சர்மா வெளுத்துவிட்டார். பவர்ப்ளேயிலேயே 71 ரன்களை சன்ரைசர்ஸ் அணி எடுத்திருந்தது. பவர்ப்ளேக்கு பிறகு ஆட்டத்தை மொத்தமாக இஷன் கிஷன் கட்டுக்குள் வந்தார். ஆர்சிபியின் ஸ்பின்னர்களுக்கு எதிராக அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்டார். அவருடன் சேர்ந்து அனிகேத் வர்மாவும் கலக்கினார்.

Ishan Kishan
Ishan Kishan

இஷன் கிஷன் கடைசி வரை ஓயவில்லை. கடைசி ஓவரிலும் சிக்சர்களை பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை 231 ஆக்கினார். அவர் 94 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக பெவியனுக்குத் திரும்பினார். சீசனின் தொடக்கத்தில் இப்படியொரு இன்னிங்ஸை ஆடியிருந்தார். கடைசிப் போட்டியில் மீண்டும் அப்படியொரு இன்னிங்ஸை ஆடி நிறைவு செய்திருக்கிறார்.

‘வேகமெடுத்த கோலி!’

பெங்களூருவுக்கு 232 ரன்கள் டார்கெட். இமாலய சவால் கொண்ட டார்கெட். ஆனாலும் பெங்களூரு அணி சோடைபோகவில்லை. முதல் பந்திலிருந்தே சேஸூக்கு சென்றது. பவர்ப்ளேயின் முடிவில் பெங்களூரு அணி 72 ரன்களை எடுத்திருந்தது. பவர்ப்ளேயில் ஆதிக்கம் செலுத்திய விராட் கோலிதான். தனது மணிக்கட்டின் பலத்தால் பேட்டை லாவகமாக சுழற்றி வட்டத்துக்குள் நின்ற பீல்டர்களை அழகாக க்ளியர் செய்தார்.

Virat Kohli
Virat Kohli

200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருந்தார். உனத்கட், பேட் கம்மின்ஸ் போன்றோரின் ஓவர்களில் லாவகமாக பவுண்டரிக்களை அடித்தவர், இசான் மலிங்காவின் ஓவரில் சிக்சரை பறக்கவிட்டார். நடப்பு சீசனில் சேஸிங்கில் கோலி அரைசதம் அடித்த போட்டிகளிலெல்லாம் ஆர்சிபி வென்றிருக்கிறது. கோலி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்க, பவர்ப்ளே முடிந்த பிறகு ஸ்பின்னர் ஹர்ஷ் துபே வீசிய பந்தில் பாய்ண்ட்டை க்ளியர் செய்ய முடியாமல் அவுட் ஆனார்.

இதன்பிறகும் கூட பெங்களூரு நன்றாகத்தான் ஆடியது. கோலி விட்ட இடத்திலிருந்து அப்படியே பில் சால்ட் தொடர்ந்தார். அட்டகாசமான ஆட்டம். அவர் அவுட் ஆன பிறகுதான் பிரச்சனையே. கம்மின்ஸின் ஓவரில் 62 ரன்களை எடுத்திருந்த நிலையில் சால்ட் அவுட் ஆனார்.

SRH
SRH

‘டெத் ஓவர் ட்விஸ்ட்!’

பவர்ப்ளேயில் சன்ரைசர்ஸ் 71 ரன்களை எடுத்திருந்தது. பெங்களூரு 72 ரன்களை எடுத்திருந்தது. 7-15 மிடில் ஓவர்களில் சன்ரைசர்ஸ் 97 ரன்களையும் பெங்களூரு 95 ரன்களையும் எடுத்திருந்தது. ஆக, சேஸிங்கில் சன்ரைசர்ஸூக்கு ஈடாகத்தான் பெங்களூருவும் சென்று கொண்டிருந்தது. கடைசி 5 ஓவர்களில்தான் தடுமாற்றம் ஏற்பட்டது. அந்த டெத் ஓவர்களில் பெங்களூரு அணி 22 ரன்களை மட்டுமே எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

குறிப்பாக, 15.4 – 16.2 ஓவர் வரைக்கும் இந்த 5 பந்துகளுக்குள் 3 விக்கெட்கள் விழுந்திருந்தது. இசான் மலிங்கா வீசிய 16 வது ஓவரில் ரஜத் பட்டிதர் ரன் அவுட் ஆகியிருந்தார். அதே ஓவரின் கடைசிப்பந்தில் 118 கி.மீ வேகத்தில் ஒரு ஸ்லோயர் ஒன்னில் ஷெப்பர்டை மலிங்காவே கேட்ச் ஆக்கியிருந்தார். உனத்கட் வீசிய அடுத்த ஓவரில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஜித்தேஷ் சர்மா அவுட். ஒரு 5-10 நிமிடங்களுக்குள் ஆட்டம் அப்படியே சன்ரைசர்ஸ் பக்கமாக மாறியது.

SRH
SRH

பீல்டிங் செய்யும் போது டிம் டேவிட்டுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்தது. அதனால் அவர் டெய்ல் தொடங்குவதற்கு முன்பாக கடைசி பேட்டராகத்தான் வந்தார். அவரால் ஓடவே முடியவில்லை. சிங்கிள்கள் எடுப்பதையே தவிர்த்தார். ஆனாலும் பவுண்டரியெல்லாம் வரவில்லை. ஐந்தே பந்துகளில் அவுட்டும் ஆனார். அவரின் விக்கெட்டையும் இசான் மலிங்காதான் வீழ்த்தினார். இறுதியில் 189 ரன்களுக்கு பெங்களூரு ஆல் அவுட்டும் ஆனது.

SRH
SRH

டெத் ஓவர்களும் ஆர்சிபியின் Flow விலேயே சென்றிருந்தால் கட்டாயம் இந்தப் போட்டியில் ஆர்சிபி வென்றிருக்கும். இப்போது முதல் இரண்டு இடங்களுக்குள் நீடிக்க ஆர்சிபி கட்டாயம் அடுத்த போட்டியை வென்றே ஆக வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *