
’மகாராஜா’ என்ற மாபெரும் வெற்றிப் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படம் என்பதால் இப்படத்துக்கு இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. எனினும் இப்படி ஒரு படம் வெளியாவது குறித்தே பலருக்கும் தெரியாத நிலையில் தான் இதற்கான விளம்பரப் பணிகளும் நடைபெற்றன. முழுக்க முழுக்க கமர்ஷியல் பாணியில் விஜய் சேதுபதி களமிறங்கிய இப்படம் ‘சைலன்ட்’ ஆக சம்பவம் செய்ததா என்று பார்ப்போம்.
பிழைப்புக்காக சமையல் வேலையில் சேர மலேசியா வருகிறார் போல்ட் கண்ணன் (விஜய் சேதுபதி). தனது நண்பரின் சிபாரிசு என்பதால் அவரை வரவேற்று தன்னுடன் தங்க வைத்துக் கொள்கிறார் காகிதம் சேகரிக்கும் பணியாளரான அறிவு (யோகிபாபு). தான் தங்கி இருக்கும் வீட்டுக்கு எதிரில் வசிக்கும் ருக்கு (ருக்மிணி வசந்த்) மீது கண்டதும் காதல் வசப்படுகிறார் போல்ட் கண்ணன். காதலிக்கு பணம் தேவை என்பதால் சூதாட்டத்தில் ஈடுபட்டு பெரும் கடனில் சிக்கிக் கொள்கிறார். மலேசியாவில் பெரிய டான் ஆக இருக்கும் தர்மாவுக்கு (பி.எஸ்.அவினாஷ்) கொடுக்க வேண்டிய அந்த தொகைக்காக வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார். அவரின் திட்டம் நிறைவேறியதா? என்பதே ‘ஏஸ்’ படத்தின் மீதிக் கதை.