
ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் ‘ரஷ்யாவின் நிழற் கடற்படை’ யைச் சுட்டிக்காட்டி தடைகளை விதித்துள்ளன.
மேற்குலக நாடுகள், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்த ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. உதாரணமாக ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளன.
தற்போது ரஷ்யாவின் ரகசிய கப்பல்கள், கச்சா எண்ணெய்யை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதை, “ரஷ்யாவின் நிழற்கடற்படை” என அழைக்கின்றனர். இதனைச் சுட்டிக்காட்டி போடப்பட்டுள்ள தடைகள் மேற்குலக நாடுகளின் ஆக்ரோஷமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
ரஷ்யாவின் நிழற் கடல்படையும் அதன் செயல்பாடுகளும்
போருக்கு ஆகும் செலவுகளை ஈடு செய்ய ரஷ்யா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரஷ்ய அரசு, பழைய கப்பல்களை (பெரும்பாலும் எண்ணெய் கப்பல்கள்) பயன்படுத்தி, மேற்குலக நாடுகளின் தடைகளை ஏமாற்றி உலக நாடுகளுக்கு ரகசியமாக எண்ணெய் ஏற்றுமதி செய்துவருவதாகக் கூறப்படுகிறது.
இந்த கப்பல்கள் முறையாகப் பதிவு செய்யாததாகவும், கண்காணிக்கப்படாததாகவும், சர்வதேச விதிகளைப் பின்பற்றாததாகவும் இருப்பதனால் இதனை நிழற் கடற்படை என்கின்றனர்.
கப்பல்கள் தங்களது இருப்பிடத்தை மற்றவர்களுக்குத் தெரிவிக்க ஏ.ஐ.எஸ் என்ற தானியங்கி அடையாள அமைப்பை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இவை, அந்த அமைப்பை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு ரகசியமாக நகர்கின்றன.
இந்த கப்பல்கள் அவற்றின் இயக்கங்களை மறைத்து, கொடிகளை மாற்றி, பொய்யான உரிமையாளர் பெயர்களில் இயக்கப்படும்.
ஒருநாள் ஒரு கொடியில் ஒரு பெயரில் செயல்படும், அடுத்தவாரம் மற்றொரு கொடியில் மற்றொரு பெயரில் இயங்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் யாருக்கு சொந்தமான கப்பல் என்பதை அறிவதில் குழப்பம் ஏற்படும்.

சில நேரங்களில் கிரீஸ், மலேசியா நாடுகளுக்கு இடையில் ஒரு கப்பலில் இருந்து எண்ணெய் மற்றொரு கப்பலுக்கு மாற்றப்படும். இதனால் எண்ணெய் எங்கிருந்து வருகிறது என்பதை அறிவது ஆய்வாளர்களுக்கு கடினமானதாக இருக்கும்.
இந்த ரகசிய செயல்பாட்டில் பெரும்பாலும் 15 ஆண்டுகளுக்கும் மேல் பழைய கப்பல்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளிலிருந்து இரண்டாம் உரிமையாளரால் வாங்கப்பட்டவையாக இருக்கும். இதனால் கடலில் எண்ணெய் கசிவது, விபத்து ஏற்படுவது போன்ற ஆபாயங்களும் உள்ளன என்கின்றனர்.
கடந்த 2024 டிசம்பரில் நிழற் கடற்படையைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள், கருங்கடலில் எண்ணெய் கசிய காரணமாக இருந்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் இது போன்ற 342 கப்பல்களை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. பிரிட்டன் சட்டவிரோத எண்ணெய் விற்பனையில் பங்குவகித்த 100 கப்பல்களை தடை செய்துள்ளது.
நிழற் கடற்படை ஏன் தேவை?
ரஷ்யாவுக்கு எண்ணெய் ஏற்றுமதிதான் முக்கியமான வருமானம் என்பதனால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் பொருளாதார தடைகளை விதித்தன.
2022ம் ஆண்டு ரஷ்யா ஒரு பாரல் எண்ணெய் 60 டாலருக்கு அதிகமாக விற்பனை செய்ய முடியாதபடி விலை வரம்பை அறிமுகப்படுத்தின. விதிகளை மீறினால், ஐரோப்பிய கப்பல் நிறுவனங்கள் ரஷ்யாவின் எண்ணெய்யை கொண்டு செல்ல உதவுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
ரஷ்யா, போருக்கு நிதி ஒதுக்க எண்ணெய் வளங்கள்தான் முக்கிய காரணியாக இருக்கின்றன என்பதனால், விதிகளைப் பின்பற்றாமல் எண்ணெய் விற்பனையைத் தொடர ரஷ்யாவால் உருவாக்கப்பட்டதுதான் நிழற் கடற்படை!
நிழற் கடற்படை காரணமாக பொருளாதார தடை விதிப்பதில் அமெரிக்கா கலந்துகொள்ளாதது, ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை மங்கச் செய்வதாக விமர்சிக்கப்படுகிறது.