
ஓடிக்கொண்டிருந்த தனியார் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட, சாதுரியமாகச் செயல்பட்டு கையால் பிரேக் பிடித்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய நடத்துனரின் செயல், கவனம் பெற்றிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பிரபு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இன்று பழனியிலிருந்து கிளம்பிய பேருந்து கணக்கன்பட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநர் பிரபுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஸ்டியரிங்கில் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணி கூச்சலிட்டதை கண்டு, நடத்துநர் உடனடியாக டிரைவர் அருகே வந்து நிலைமையை புரிந்துகொண்டு சாதுரியமாக செயல்பட்டு பிரேக்கை கையால் அழுத்தி பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால் பெரும் விபத்து ஏற்படவிருந்தது, நடத்துனரின் செயலால் தடுக்கப்பட்டது. பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.
அதன் பின்பு ஸ்டியரிங்கில் விழுந்திருந்த ஓட்டுநர் பிரபுவை உடனடியாக அங்கிருந்து மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

ஆயக்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.