
‘அரக்கோண சம்பவம் – தவெக கண்டனம்!’
அரக்கோணத்தில் திமுக-வின் இளைஞரணியை சேர்ந்த தெய்வச்செயல் என்பவர் மீது பெண் ஒருவர் அளித்திருக்கும் பாலியர் புகார் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் அந்த சம்பவத்தைக் கண்டித்து தவெக சார்பில் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தவெக அறிக்கை!
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ‘ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒன்றியத் திமுக இளைஞர் அணித் துணை அமைப்பாளர் தெய்வச்செயல் என்பவர் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாகக் கல்லூரியில் படிக்கும் அவரது மனைவி புகாரளித்தார். புகாரைப் பெறுவதற்கே அலைக்கழித்த காவல் துறையினர். ஊடகங்களில் செய்தி வெளியானதால் வேறு வழியின்றி, புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், காவல் துறையினர் தெய்வச்செயலை அழைத்து விசாரிக்கவும் இல்லை. கைது செய்யவும் இல்லை.
இதனால் நம்பிக்கையிழந்த அந்தக் கல்லூரி மாணவி, சென்னை வந்து டிஜிபியிடமும் நேரடியாகப் புகார் மனு கொடுத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸின் உதவியாளர் உமா மகேஸ்வரனுக்குத் தன்னை இரையாக்கத் தெய்வச்செயல் முயன்றதாகவும், தொடர்ச்சியாக மிரட்டப்படுவதாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். மேலும், தன்னைப் போன்றே இன்னும் 20 பெண்கள் தெய்வச்செயலிடம் சிக்கியிருப்பதாகவும் கூறினார்.

இவ்வழக்கு குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் ராணிப்பேட்டை மாவட்டக் காவல் துறையினர். கடந்த 10-05-2025 அன்றே வழக்குப்பதிவு செய்துவிட்டதாகவும், அரசியல் பிரமுகருக்கு இரையாக்க முயன்றதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். காவல் துறை சொல்வதே உண்மை என்று வைத்துக்கொண்டாலும், கடந்த 10ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தும் குற்றம் சாட்டப்பட்ட தெய்வச்செயலை இதுவரை அழைத்து விசாரிக்காதது ஏன்? என்ற கேள்விக்கு விடையில்லை.
அதுமட்டுமின்றி, தனது கட்சி நிர்வாகி பாலியல் புகாரில் சிக்கினால். உடனடியாக அந்த நிர்வாகியைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்பது கட்சித் தலைமையின் தார்மீகக் கடமை. ஆனால், இந்த வழக்கில் 10 நாட்களாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியான பிறகு தான், பாலியல் புகாரில் சிக்கிய தெய்வச்செயலைக் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். அதுவும் கட்சியை விட்டே முற்றிலுமாக நீக்கவில்லை, பொறுப்பில் இருந்து மட்டுமே விடுவித்துள்ளனர்.

இத்தனை நாட்களாக அந்த நிர்வாகியைக் காப்பாற்ற, திமுக திரைமறைவு வேலைகளைப் பார்த்தது என்பது இதன்மூலம் வெளிச்சமாகியுள்ளது. இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட பெண், தன் முகத்தை மறைத்தவாறு தன்னிலை விளக்கம் அளிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பேசிய பாதிக்கப்பட்ட அவர் ‘டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்து இரண்டு நாட்களாகியும் முதல் தகவல் அறிக்கையோ, சி.எஸ்.ஆர். நகலோ எனக்கு வழங்கப்படவில்லை. போலீஸார் தினமும் எனது வீட்டுக்கு வந்து என்னிடம் விசாரணை என்ற பெயரிலும், வாக்குமூலம் பெறுகிறோம் என்ற பெயரிலும் டார்ச்சர் செய்கின்றனர்.

தெய்வச்செயலால் பாதிக்கப்பட்ட 20 பெண்கள் யார்? என்று என்னிடம் துருவித் துருவி கேட்கிறார்கள் என்று வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், காவல் துறையினரிடம் ஒப்படைத்த ஆவணங்கள், திமுக ஐடி விங்கைச் சேர்ந்த ராகுல் என்பவர் பெயரில் சமூக வலைத் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் புகார் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வழக்கு தொடங்கி, இந்த அரக்கோணம் பாலியல் வழக்கு வரை, குற்றவாளிகளான தன் கட்சி நிர்வாகிகளைப் பாதுகாப்பதையே முதல் பணியாக விளம்பர மாடல் முதல்வர் செய்துகொண்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண், தமக்கு நீதி கிடைத்திட. காவல் நிலையம் முதல் கவர்னர் மாளிகை வரை கண்ணீருடன் அலைந்துகொண்டிருக்கிறார். ஆனால், அந்தப் பெண் பற்றி ஆளுங்கட்சியினர் சிறிதும் கவலைப்படாமல், நீதி கிடைக்க எவ்வித முயற்சியும் செய்யாமல் இவ்விவகாரத்தை அரசியலாக்கி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருப்பது முரணானது, நகைப்புக்குரியது.

அரக்கோணம் பாலியல் வழக்கில் சிக்கியவரைக் கைது செய்யாமல் சுதந்திரமாக நடமாட விட்டிருப்பது வெட்கக் கேடானது. பிஞ்சுக் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை இந்த ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத கொடுமையான சூழல் ஒருபக்கம் என்றால். துணிச்சலாக ஒரு பெண் புகாரளித்தும் குற்றவாளியைக் கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் அவல நிலை இன்னொரு பக்கம்.
எனவே, பாலியல் புகாரில் சிக்கிய தெய்வச்செயல் என்பவரைக் காவல் துறை கைது செய்து, எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் பணியாமல் துரித விசாரணை நடத்தி அவருக்குத் தகுந்த தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில், பாலியல் புகாரளித்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.’ எனக் கூறப்பட்டிருக்கிறது.