
சிங்கப்பூர் போன்ற பல்லினச் சமூக வாழ்வியலுக்கிடையே தங்களுக்கான மொழியை, கலையை, கலாசார அடையாளத்தை உயிர்ப்பித்துக்கொண்டே இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கமுடியும்? தனித்த அடையாளத்துடன் வரலாற்றை, நிலத்தை, அதன் பண்புகளை, அன்றாட வாழ்வியலை, தனித்துவத்தை, மதிப்பீடுகளை, பண்பாட்டுச் சவால்களை, சித்திரங்களை இலக்கியத்தின் வழியாக வெளிக்கொணர வேண்டியதன் தேவை இருந்துகொண்டுதானிருக்கிறது.
புலம்பெயர் இலக்கியம் என்பது குறுகிய வட்டத்தில் மட்டும் சுற்றிக்கொண்டேயிருப்பதல்ல. அதன் பன்முகங்களை மொழியின் வழியாகக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. இம்மண்ணின் பூர்வக்குடிகள் தேடியும் தொகுத்தும், வகுத்தும் வைத்ததை உயர்த்திப் பிடிக்கவேண்டியிருக்கிறது. ஆனாலும் சுற்றியிருக்கும் சமுத்திரத்தில் ஆர்ப்பரிக்கும் அலையில் சிறு தோணியை மட்டுமே மிதக்கவிடுகின்றோம்.
அதிகாலையில் என்னை முந்தும் காற்றோடு எழுந்தோடி அலுவலக அறை முழுவதும் சிதறிக் கிடக்கும் சிறகுகளை இறுக மூடிக்கொண்டு, இடையில் கொஞ்சம் இளைப்பாற நேரம் கிடைத்தாலும் சூரியன் சிரிக்கும் வானத்தைப் பார்த்தவாறு, மந்திரச் சொற்களை வசப்படுத்தி அதற்குள் அலைந்து திளைக்கிறது திசைகளற்ற ஒற்றைப் புள்ளியின் நகர வாழ்வு. கடல் நீரசைவில் மனம் அலைபாய்ந்தாலும் பட்டாம்பூச்சியின் இதயத் துடிப்புடன் ஒரு நகரம் வளர்வதற்குப் பின்னால் ஏராளமான குரல்கள் புதைந்து கிடக்கின்றன. சில குரல்கள் காற்றில் கலந்துவிடுகின்றன. சில குரல்கள் கதைகளாக மாறிவிடுகின்றன. சில குரல்கள் இதயத்துடிப்பாகத் தொடர்கின்றன. அப்படி சிங்கப்பூர் ஆங்கில இலக்கியம் ஆராதிக்கும் கவிக்குரல்களில் ஒன்று எட்வின் தம்புவினுடையது.

1880களில் ஒரு நாள். சென்னையிலிருந்து கிளம்புகிறது கப்பல் ஒன்று. பெட்டியைத் தூக்கிக்கொண்டு அதிலேறி நாட்டைக் கடந்து சிங்கப்பூர் வந்து சேர்கிறார் எட்வின் தம்புவின் தாத்தா. சிங்கப்பூரில் சிறிது காலம் வேலை செய்த பின் ஜொகூர் சுல்தான் அபுபக்கரிடம் பணியில் சேர்வதற்காகப் பாலத்தைக் கடந்து செல்கிறார். புலம்பெயர்ந்த வாழ்வினைத் தேர்ந்தெடுத்தவரின் வாரிசு சிங்கப்பூர் நிலத்தை அகழ்ந்து அகழ்ந்து அதில் புதைந்து கிடக்கும் சொற்களைக் கண்டறிந்து கவிதைகள் புனைந்து பெருங்கவிஞராகக் கூடுமென அன்று அவர் நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சப்பானிய ஆதிக்கம் இருந்த காலக்கட்டத்தில் வளர்ப்புப் பாட்டியைச் சந்திக்க அடிக்கடி நாகசாகிக்குச் சென்று வந்தவருக்கு இலக்கியத்திற்குள் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு தானாக வந்ததென நம்பமுடியவில்லை.
சிலர் கவிதைகளாக எழுதிச்செல்கிறார்கள், சிலர் தேசத்தை எழுதிச் செல்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்க ஒருவராக, சிங்கப்பூரின் கவனித்தக்க ஆங்கிலக் கவிஞராக விளங்கும் எட்வின் தம்பு, சிங்கப்பூரின் பெருங்கவிஞர் .
தனது இளமைக்காலம் முழுவதையும் மண்டாய் பகுதியில் கழித்தாலும் நார்த் பிரிட்ஜ் சாலையில் கேக்குகளை விற்பனை செய்திருக்கிறார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் ஆப்பிரிக்கக் கவிதைகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர், பின் பேராசிரியராகத் தனது பயணத்தினை சிறு கையசைப்புபோல் கடந்து வந்திருக்கிறார்.
தம்புவின் எழுத்துகள் சிங்கப்பூர் நிலத்தைத் தேடி நடக்கும் சொற்கள். அவை நாட்டைச் சுற்றியிருக்கும் கடல் நீர்மையின் நடுவில், ஒரு நிமிடம் நின்று நிதானிக்க வைக்கும் ஓர் உணர்வுப்பூர்வமான பயணம்.

தனது உயிரணுவை மொழியாகவும் தனிமையை வலியாகவும் உணர்ந்த தேசத்தின் கனவை எழுத்தில் வடித்த மனிதராகவும் கவனிக்கப்படுகிறார்.
சிங்கப்பூரின் வரலாற்றை எழுத முனைந்து உள்ளே நுழைபவர்களுக்குக் கடந்து வந்த காலத்தை, நடந்து சென்ற பாதையின் ஒவ்வொரு அடியையும் எழுத்தின் வழியாக, வாழ்வியலைக் கதையாகச் சித்தரிகிறார்.
புராணக்கதையினை அடிப்படையாகக் கொண்டு அதிநவீன தேசத்தின் அகத்தை எட்டிப்பார்க்கும் பயணியின் கண்ணோட்டத்தில் விரிகிறது இவரது யுலிஸஸ் ஆஃப் மெர்லயன் கவிதை. இது வெறும் கவிதையாக மட்டுமின்றி காலத்தின் எதிரொலியாக நிற்கிறது. ஹோமரின் ஒடிஸியின் நாயகனான கிரேக்க உருவமான ஒடிஸியஸின் பெயரான யுலிஸஸ் கவிதைக்குள் வந்துவிடுகிறான். கடல் வழியாகப் பல சோதனைகளுக்குப் பின் சிங்கப்பூரில் மெர்லயனைச் சந்திக்கிறான். ஆனால் இது வெறும் ஒரு சந்திப்பு அல்ல; இது அடையாளத் தேடல், புதிய உலகம் உருவாக்கும் தருணம்.
இக்கடல் சிங்கம்
உப்புப் பூச்சுடனும் செதில்களுடனும்
வாலில் வல்லமையுடன்
அதிகாரத்தைக் கையிலேந்தி
இந்தச் சிறிய துறைமுகத்தில்
உறுதியாக நின்றுகொண்டிருக்கிறது,
அது ஒரு புதிர்!
உப்பு நீரினருகில் நின்று கொண்டிருந்த மெர்லயன் ஒரு புதிர். அது சிங்கமல்ல, மீனுமல்ல என்று சமநிலையைத் தேடும் சக்தி வாய்ந்த உருவமாகப் பார்க்கிறான் யுலிஸஸ். சிங்கப்பூரின் அடையாளத்தை ஒரே வரியில் விற்பனைகள் நடைபெறும் தளமாகவும், வேலைப்பளு நிறைந்த சமூகமாகவும் வர்ணிக்கிறார் தம்பு. ஆனால் இதன் உட்பொருள் சலிப்புக்கும் தேடலுக்கும் இடையில் சிக்கிய சமூகத்தின் உணர்வுகளை, நாட்டின் வளர்ச்சி மட்டும் போதுமானதா வாழ்க்கைக்கு, நமது உயர்ந்த கட்டடங்களுக்கு மேலாக நம்மை உணர முடிகிறதா என்ற கேள்விகளையும் உடன் வைக்கிறார். மக்கள் பழைய கனவுகளைத் தாங்கிக்கொண்டு, புதிய பார்வைகளுடன் வாழ்கிறார்கள். இதுவே பன்முகக் கலாசாரத்தின் தனித்துவம் என்றாலும் பழைமையின் மீது சரிந்திருக்கும் எதிர்பார்ப்புகளும் இதில் அடங்கும்.

பயணத்தின் சோர்வு, நவீன நாட்டின் மீதான மயக்கம், அடையாளத் தேடலுக்குள் சிக்கியிருக்கும் தனிமை, குறுகிய பின்னணியில் எழும் பல இனச் சமூகத்தின் புதுக்கனவுகளென யுலிஸஸ் உணர்வதாகச் சொல்கிறார். இந்த மெர்லயன் வெறும் உருவம் அல்ல, அது மக்கள் தங்களைத் தேடுதலின் பிரதிபலிப்பென, கவிதை ஒரு பயணியின் மிரள மிரள விழிக்கும் பார்வையில் ஒரு கவிஞரின் மன ஊடாட்டத்தில், புறவய பாதிப்புகளுக்கு நடுவில், அகத்தின் உரையாடலாக நகர்கிறது. நாம் யார், எங்கிருந்து வந்தோம். எங்கே செல்கிறோமென்ற கேள்விகளுக்கு விடைதராமல் நம்மையும் யுலிஸஸாக மாற்றிவிடுகிறது.
சிங்கப்பூருக்கென நீண்ட நெடிய வரலாறில்லை. புலம்பெயர்ந்தவர்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்ட நாடாக இருப்பதால் அவரவர் வேர்களைத் தேடியலைய வேண்டியிருக்கிறது. வரலாற்றை, நிலத்தைத் திரும்பிப் பார்க்க உயிர்ச்சாற்றையெல்லாம் கொட்டி ஆரத்தழுவ வேண்டியிருக்கிறது. இதற்குள் உள்ள மௌனமான ஏக்கம், எதையோ விட்டு விலகிக்கொண்டிருக்கிறோமென்ற குரல் தம்புவின் தனித்த குரல் மட்டுமல்ல.
பழைய எண்ணங்களும், புதிய நினைவுகளும் பின்னிக்கொள்ளும் பசுமைமிகு அழகியல் நிறைந்த மண்டாய் மலையின் நிழலுக்குப் பின்னே அமைதியாய் உறங்கும் அந்த ரகசிய ஓடையை, தனது மண்டாய் வாழ்வியலின் நினைவுகளை, ‘நேற்று’ எனும் கவிதையில் நடமாடவிடுகிறார்.
மே 1954 எனும் கவிதையில், பூமியில் விளைந்ததைத் திருடிக்கொண்டு எங்களை விட உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொண்ட வெள்ளையர்களைப் பார்த்து,
நாங்கள் முட்டாள்களென நினைத்துக்கொண்டு
உன் மொழியின் ஆளுமையால் எங்களை வெறுக்காதே
உன்னையும் எங்களுக்குத் தெரியும்
உனது மொழியும் எங்களுக்குத் தெரியும்
முதலாளிகளின் குரல்களுக்குப் பணிந்து செல்பவர்கள் என்றாலும் கட்டாயத்தினால் மறைத்துக்கொண்ட காயங்களை, வேதனைகளைக் காகிதங்களாய்க் கிழித்து ஆயிரமாயிரம் தலைகளை உருட்டிய வெள்ளைய வீரர்களை வெளியேறு என்கிறார்.

பலமுறைதான் நின்ற இடமான பொங்கோல் பாய்ண்ட், நான்கு விரல்களும் தென்றலை வருடும்போது ஒரு தேன் சிட்டு வாலையாட்டி, கரிய அலகால் மகரந்தத்தை உறிஞ்சியபடி செல்ல, எறும்புகள் குறுநடை போடுகின்றன. மீன் கொத்திப் பறவைகள் இறகுகளைக் கோதிக்கொள்ள, வான்உச்சியில் பருந்துகள் வட்டமிட்டாலும், இயற்கையின் பரிசாக இந்த நிலம் வைர நினைவுகளை அள்ளித்தருகிறது என்று பொங்கோல் நிலம் நவீனமாக உருமாறியிருப்பதையும் அதைக் கண்டு பெருமைப்படும் கவிஞனாக ஒரு நீள் கவிதை எழுதியுள்ளார்.
இரண்டு தேநீர்க் கோப்பைகளுக்குள்
இலைகளைப் போன்ற அமைதி
எப்போதும் தனியாக;
ஆனால் தனிமையில் இல்லை
தினமும் வந்திறங்கும் ரப்பர், அரிசி,
மசாலா பொருட்களைச் சுமந்து வரும்
இழுவைப் படகுகள், கூலிகளின் சந்தடிச் சத்தம்.
என அடிக்கடி பெய்யும் மழைக்குப்பின் காய்ந்துவிடும் அந்த நாளை திரும்பிப் பார்க்கவும் செய்கிறார்.
வளமான சொற்களுடன் பாடுபொருள்கள், நிலம் சார்ந்த கருப்பொருள்களில் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்திய தம்புவின் கவிதைகளைக் காணும்போது கவிதைப் பணி என்பது ஆழ்ந்த துல்லியத்துடன் வழங்குதல் எவ்வளவு முக்கியமானதென உணரவைக்கிறது.
வரலாற்றுடன் சமூகத்தைப் பற்றிய கவிதைகளை மட்டும் எழுதியிருக்கிறாராவென எட்டிப் பார்த்தால் காக்கையிடும் கற்களால் நிரம்பி வழியும் குடம்போல் வேர்களும், கிளைகளும், குடும்பமும் நண்பர்களும், மக்களும் இடங்களும், கடவுளும் புனிதமும் இவரது மனஊற்று நிரம்பித்தான் வழிகிறது.
தும்புவின் ‘தும்மல்’ என்ற கவிதையில், 1950களின் ஹொக்லாம் வீதியில் இருந்த விறுவிறுப்பான ஹாக்கர் சந்தையை உயிர்ப்பித்திருக்கிறார். மீயும் குவெய்த்தியாவும் விற்கும் உணவங்காடிக்காரன் மூக்கைச் சிந்துகிறான், கைப்பக்குவத்துடன் கிள்ளித்திருகி சளியின் வெளியேற்றத்தை உறுதி செய்தபின் வேலைகளைத் தொடர்கிறான், நீங்கள் மீ அல்லது குவெய்த்தி யாவ் உண்ட பின் தும்மினால் அதற்குக் காரணம் ஆவிபறக்கும் சூப்பும், மிளகாயும், மிளகும் தான் என்று சட்டங்களை மதிப்பவன் மூக்கடைப்பையும் கறாராகக் கருதுகிறான் என்று பதிவுசெய்கிறார்.
அமைதியான பொந்துக்குள் நண்டுகள் புத்திசாலித்தனமாக நழுவுகின்றன, அதில் வசந்தமில்லை, மலர்கள் பூத்திருக்கவில்லை, ஒரு கவிஞனுக்கான காத்திருப்பு என்பது ஆர்க்கிட் மலர்களின் கூடலுக்கானது தான். ஆனாலும், “ஒரு நிலத்தில் மனிதனும் இயற்கையும் வேறு வேறான வரலாறாயிருக்கிறார்கள், என் பக்கத்து வீட்டுக்காரன் வேற்று மொழி பேசுபவன்” என்கிறார்.

சிங்கப்பூரில் ஆங்கில இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞரான எட்வின் தம்பு 1979 இல் சிங்கப்பூர் அரசின் கலாசாரப் பதக்கத்தை வென்றவர். வரலாற்று ஆவணங்களை, பதிவுகளைக் கவிதைகளாக்குகிறார். அவரின் நூல், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் சமூக அறிவியல் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 85 முக்கிய நூல்களில் ஒன்றாக இருக்கின்றது. ஆரம்பகாலச் சிங்கப்பூரின் தருணங்களையும் அதன் வேகமாக வளர்ந்து வரும் நிலத்தினைப் படம்பிடித்திருக்கிறார். அவரது படைப்புகள் பெரும்பாலும் விளக்கமானவை, சிங்கப்பூரில் வாழ்ந்த அனுபவம் இல்லாமல் போனாலும் அதன் பல்வேறு காட்சிகள் மற்றும் ஒலிகளை நேரடியாக அனுபவிப்பதைப் போல் தம்புவின் கவிதைகள் கற்பனை செய்ய அனுமதிக்கின்றன. கவிதைகள் எவ்வாறு தலைமுறைகளை இணைக்க முடியும் என்பதை நிரூபிக்கின்றன.
தமிழில் இவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைத் தொகுத்து ‘The Best of Edwin Thamboo’ என்ற நூல் வெளியிடப்பட்டது. அதனைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்து ‘ஆலம்’ என்ற தலைப்பில் ஜீவஜோதி பதிப்பகம் வெளியீடு செய்திருக்கிறது. அதில் எட்வின் தம்பு சிங்கப்பூரின் முடிசூடப்படாத ஒரு தேசிய கவிஞரென இந்நூலினைத் தொகுத்திருக்கும் முனைவர் சித்ரா சங்கரன் குறிப்பிடுகிறார்.
உலகமயமாக்கலின் பெரும் மாற்றங்கள் இருந்தபோதிலும், நமது உள்ளூர் கலாசாரம் என்பது அடையாளப் படுத்துவதில் சிரமம் இருந்தாலும் அவரவர் கலாசாரம் வழக்கம்போல் துடிப்பாக உள்ளது என்பதை அவரது வரிகள் தெரிவிக்கின்றன.
1957ல் “The Cough of Albuquerque” என்ற கவிதையை எழுதும்போது எதிர்கொண்ட சிரமங்கள் பற்றி எட்வின் தம்பு நினைவு கூர்கையில், `அந்தக்கால “Bukit Panjang” பகுதி சிறிது குறைவான ஆக்கிரமிப்புகளுடன் இருந்தது. தற்போதைய சூழ்நிலைகளுக்கேற்ப நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பே விடுதி நண்பர்களுடன் மேட்டுப் பகுதிகளில் நடந்து செல்கின்றன நினைவுகள். அப்போது அது ஒரு பிரித்தானிய இராணுவ முகாமின் மையத்தில் இருந்த ஒரு பெரிய ரேடார் கட்டமைப்பால் ஆட்சி செய்யப்பட்டது. ‘1975-இல் Phoenix Heights-க்கு இடம்பெயர்ந்த பிறகு, நாங்களும் புக்கிட் பஞ்சாங்கின் ஒரு பகுதியாக ஆனோம். வளர்ந்து கொண்டிருந்த கிராமத்தை நான் தத்தெடுத்தேன், அது என்னையும் தத்தெடுத்துக் கொண்டது’, என்கிறார்.
அப்போது புக்கிட் பஞ்சாங் பகுதியில் இரண்டு வரிசையான கடைத் தொகுதிகள் இருந்தன. சில மரத்தாலும் சில செங்கற்களாலும் கட்டப்பட்ட கடைகள். அவற்றுக்குப் பின் சிமெண்ட் தரை இல்லாத வெறும் கால் வழித்தடங்கள் இருந்தன. வறட்சியான நாட்களில் விறைப்பாகவும், மழைக்காலங்களில் களிமண் கசிந்தும் காணப்பட்டன. அவற்றின் ஒன்றில் ஒரு திரையரங்கும், பக்கத்தில் சிறு உணவுக் கடைகளும் இருந்தன.

மற்றொன்றின் பிரதான சாலைக்கப்பால் கிழக்குப் பகுதியில் சந்தை இருந்தது. அங்கு மீன், இறைச்சி, காய்கறி கடைகள் மட்டுமல்ல, சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் சாலையோரம் சிறிய இடங்களில் அமரந்து, மரத்தில் பழுத்த பழங்கள் மற்றும் உயிர் கோழிகளை விற்றுள்ளனர்.
அங்கே பொம்மைகள், பட்டங்கள், சட்டைகள் மற்றும் கண்ணாடி போத்தல்களில் வைக்கப்பட்ட மீன்கள் கிடைத்திருக்கின்றன. தோட்டக்காரர்களுக்காகச் செடிகளும் தாவரங்களும் இருந்தன. நெகிழியின் வாசனையில்லாத காலம் அது என்று குறிப்பிடுகிறார். அது மக்களுக்கான சந்திப்பிடமாக இருந்தது. குறிப்பாகப் பெண்கள் மற்றும் தங்கள் விவசாய நிலங்களைக் குடியிருப்புப் பகுதிக்காக இழந்தவர்கள் பலர் இருந்தனர். தியோச்சூ, ஹொக்கியன் மொழிகள் தம்புவிற்குப் பேசத் தெரிந்ததால், மனம் திறந்த உரையாடல்கள் தனக்கு உயிர்ப்பாகவும். மண்டாய் நாட்களை மீண்டும் நினைவூட்டுவதுபோலவும் உணர்ந்தேன் என்கிறார்.
பெண்கள் பசியோடு காத்திருக்கும் நாய்களிடம் திரும்புகிறார்கள், நினைவுகளைச் சேகரிக்கிறார்கள். எது கிடைக்கிறதோ அதை எடுத்துக்கொண்டு சந்தைக்குச் செல்கிறார்கள், எதையோ விற்க, எதையோ பேச, பழைய நண்பர்களைச் சந்திக்க,
“ஆ நொய் பிள்ளை பெற்றாளா?”
“அந்த வாத்துகளை எவ்வளவுக்கு வாங்கினாய்?”
“இந்த மூக்குக் கண்ணாடியா? ஓ.. ரொம்பப் பகட்டா இருக்கே!”
ஆண்டாண்டு காலப் பழக்கத்தின் பிணைப்பை ரசிக்கிறார்கள்
ஆனால் அது இப்போது மாறிவிட்டது,
ஏனெனில் இன்னொரு மரக்குடிசை
சில மணிநேரங்களில் தூள் தூளாகியது…
என்று அவருடடான உரையாடல் ஒன்றில் குறிப்பிடுகிறார். இன்றும் சில காட்சிகள் மாறாமல் இருந்தாலும் மாறிப்போனவை ஏராளம்.
ஒரு நகரம் என்பது அதன் மக்களின் இதயமே,
அது அழகாகவோ, அருவருப்பாகவோ இருக்கலாம்
அது எவ்வாறு துடிக்கிறதென்பதில் அதன் இயல்பிருக்கிறது
ஒரு நகரின் புன்னகையென்பது
மக்களின் புன்னகையைப் பொறுத்தது
நீங்கள் புறக்கணித்தாலும், அதுவும் அந்த நகரத்தின் முகமே.
ஒரு நகரம் என்பது மக்களுக்காக, வாழ்வதற்காக,
உயரமாய் எழுந்த கட்டிடங்களின் நிழல்களுக்கிடையே
ஒரு சிறிய பகுதி கூட வாழ்வதற்கான இடத்தை விட்டுச்செல்கிறது
ஒரு நகரம் எல்லோரையும் வரவேற்பதாக இருக்க வேண்டும்;
நமது பிள்ளைகளுக்காக அதைத் தயார் செய்கிறோம்
ஒரு நகரம் என்பது நம்மால் உருவாக்கப்படும் ஒன்று,
நீங்களும் நானும்… நாமே அந்த நகரம்
நல்லதற்கும் கெட்டதற்கும் நாமே காரணம்
என்ற வரிகள் கடல் சூழ் நகரின் முகத்தை, அடையாளங்களை, நிலத்தின் வாசனையைக் கலைத்து அடுக்குகின்றன.
உலகமயமாக்கலால் ஏற்படும் பெரிய மாற்றங்களின் பின்னாலும், நமது உள்ளூர் கலாசாரம் இன்னும் உயிரோட்டமுடன் இருக்கவேண்டும் என்பதையே அவர் வரிகள் இயக்குகின்றன.
92 வயதாகும் எட்வின் தம்பு சிங்கப்பூரின் காலனித்துவக் காலத்திலிருந்து நவீன தேசமாக மாறும் பயணத்தைப் பதிவு செய்த கவிதை வரலாற்றாசிரியராகவும் விளங்குகிறார்.
அவளது புருவங்கள் தாமரைத் தளிர்களாய் மெல்ல உயர்ந்து
ஆகாயத்தின் ஆழ்ந்த மரியாதையைப் பெறுகின்றன
அவளது கண்கள் ஏழு தங்க மீன்களாய்
அமைதியான பிரதேசங்களில்
நீந்திச் செல்லும் தருணங்களை உற்று நோக்குகின்றன.
பின்னர், அவளுடைய இடது புற இதயம் இருக்கும் இடத்தில் அவள் கையைத் தயக்கத்துடன் தூக்குகிறாள்
நீண்ட இழைகளால் இறுகக் கட்டியது போல
கசப்பான, பழங்காலக் காற்று
இப்போது சோகமாக ஒன்று சேர்ந்து வருகிறது
அவளை அழைத்துக்கொள்கிறது
கடுமையானதை மட்டும் தந்துபோகும் வழியில் வருகிறது
கவிதைகளாக மாறக் காத்திருக்கிறது சூரிய ஒளி!

அவள் சூரிய ஒளி போல் கவிதை பிறப்பிற்கான தருணத்தை வழங்குகிறாள், புதிய கருத்தாக்கச் சிந்தனையைத் தூண்டுகிறாள், அவள் தான் எனது வாழ்க்கை என்று சொல்லும் எட்வின் தம்புவின் வரிகள் அவரது கவிதையோடு பிணைந்த வாழ்வியலைச் சுட்டுவது கவிதைப்பெண் எனும் க.து.மு.இக்பால் அவர்களின் கவிதையை நினைவூட்டுகிறது.
திரண்டு வரும் வெண்ணை போல் இரவுகளை வெண்ணிறமாக்கும் நகரின் நடனம், உருகி வழிந்திடாத சாலைகளில் நழுவும் கார்கள், எப்போதும் ஊர்ந்து செல்லும் நினைவுகளுடன் நேர்த்தியாய் நடந்துசெல்கிறது இந்த நகரம். இங்குப் பறக்கும் புறாக்களின் அப்பழுக்கற்ற வெள்ளை அழகை ஆராதித்தும் தழுவியும் விமர்சித்தும் பாடல்களை உரத்துப் பாடிய எட்வின் தம்பு, கனவுகளைத் தின்னும் நிலத்தின் ஒற்றைச் சிறகு.
–சொற்கள் மிதக்கும்!