
ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் வேளையில் ஈடுபட்டு வருகிறது.
2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையில் 22 மில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 60 சதவிகிதம் அதிகம்.
அதோடு, இந்த உற்பத்தி சதவிகிதமானது உலகம் முழுவதும் தயாரிக்கப்பட்ட ஐபோன்களில் 15 சதவிகிதம்.
மேலும், சீனா தயாரிக்கப்படும் பொருள்களுக்கு ட்ரம்ப் அதிக வரி வைத்திருப்பதால், ஐபோன் உற்பத்தியை சீனாவில் குறைத்து, அதை இந்தியாவில் அதிகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் முயற்சிகள் எடுத்துவருகிறது.
ஆனால், இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்படுவதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரும்பவில்லை.
இதனை, கடந்த சில தினங்களுக்கு முன்பு கத்தாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியைக் கட்டமைப்பதைத் தான் விரும்பலில்லை என்று ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.
தற்போது, அந்த எச்சரிக்கையின் அடுத்தகட்டமாக ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், “அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும், இந்தியாவிலோ வேறு எங்கோ இருக்கக்கூடாது என்று முன்பே ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் தெரிவித்திருந்தேன்.

எனவே, அப்படியில்லையெனில் அமெரிக்காவுக்கு ஆப்பிள் நிறுவனம் குறைந்தபட்சம் 25 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என இன்று (மே 23) பதிவிட்டிருக்கிறார்.
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பால், ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 2 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், ட்ரம்ப்பின் இத்தகைய அறிவிப்பு தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் தரப்பிலிருந்து அறிவிப்பும் வெளியாகவில்லை.