
அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் கொலை செய்யப்பட்ட இரவில் அணிந்திருந்த உடைகள் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தின் மூலம் லிங்கன் அறக்கட்டளைக்கு அதன் 20 ஆண்டுக்கால கடன்களை அடைக்க 7.9 மில்லியன் டாலர், சுமார் 67 கோடி ரூபாய் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தொகையில் ஏல நிறுவனத்தின் நிர்வாக செலவுகளுக்காக 28% போக, அறக்கட்டளைக்கு சுமார் 6.1 மில்லியன் டாலர் (52.6 கோடி ரூபாய்) கிடைத்திருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்புடைய பொருட்கள் நீண்டநாள்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தன.
ஆனால் அறக்கட்டளை நிறுவனம் 8 மில்லியன் டாலர் கடனில் விழுந்ததாலும், நிறுவனத்துக்குள் எழுந்த சர்ச்சரவுகளாலும் 144 பொருட்களை ஏலம் விட முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இவற்றில் அவர் கொலை செய்யப்பட்ட ஏப்ரல் 14, 1865 அன்று அவரது சட்டைப்பையிலிருந்த கையுறை உட்பட 136 பொருட்கள் விற்கப்பட்டன.

இதில் அதிகபட்சமாக அவரது ரத்தக்கறை படிந்த கையுறை, 1.52 மில்லியன் (ரூ.12.9 கோடி) டாலர்கள் விலைக்கு எடுக்கப்ப்பட்டுள்ளது (28% ஏல நிர்வாக செலவுகள் உட்பட). அவரது கைக்குட்டை சுமார் 7 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.
ஆபிரகாம் லிங்கன் கொலைசெய்யப்பட்ட 12 நாட்கள் கழித்து, கொலையாளி ஜான் வில்க்ஸ் பூத் என்ற நாடக நடிகர் அமெரிக்க காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொலை சதியில் ஈடுபட்ட பூத் உள்ளிட்ட 3 குற்றவாளிகளைத் தேடும் wanted சுவரொட்டி, 7.6 லட்சம் டாலர் (ரூ.6.5 கோடி) விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல பொருட்கள் அதிக விலைக்கு எடுக்கப்பட்டன.
ஏதேனும் ஒரு வரலாற்றுத் தலைவரின் நினைவுப் பொருட்களை நீங்கள் ஏலத்தில் வாங்க நினைத்தால், எந்த தலைவர் பயன்படுத்திய பொருட்களை வாங்குவீர்கள் என கமென்ட்டில் தெரிவியுங்கள்!