• May 23, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு அருகே மிகப்பெரிய அளவிலான நகராட்சி மைதானம் அமைந்துள்ளது. சுமார் 120 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த மைதானத்தில்தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விடுமுறை நாள்களிலும் ஓய்வு நேரங்களிலும் தங்களது பொழுதை கழிக்கிறார்கள். இது மட்டுமன்றி சில அரசு நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறுகிறது. ஒரு காலத்தில் மாநில அளவில் கால்பந்து விளையாட்டுக்கள் நடைபெற்ற இடம் இது. தற்போது கால் வைப்பதற்குக்கூட இடமில்லாமல் குப்பைக் குவியலாய் காட்சியளிக்கிறது. மதில் சுவர் உடைந்து காணப்படுவதால், பலர் இந்த வழியினை போக்குவரத்திற்கும் உபயோகப்படுத்துகிறார்கள்.

இவை மட்டுமன்றி நாய், மாடு, பன்றி போன்ற விலங்குகளும், இங்கு வந்து குப்பைகளை மேய்வதால்… அவற்றுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாகவே உள்ளது. இந்த நகராட்சி மைதானத்தைச் சுற்றி ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைத்து குழந்தைகளும் இந்த மைதானத்தைதான் பல ஆண்டுகளாக விளையாடுவதற்காக உபயோகப்படுத்துகிறார்கள். குப்பைகளை அகற்றாமல் அங்கேயே வைத்து எரிப்பதால் நுரையீரல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயமும் அதிகமாக உள்ளது.

இது பற்றி அங்கு விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் கூறுகையில், “நாங்கள் 15 ஆண்டுகளுக்கு மேல் இந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறோம் .மூன்று மாதங்களுக்கு முன்னர் இங்கு சி.வி.சண்முகம் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதற்கு பிறகு இன்னும் இந்த இடத்தை ஒரு முறைக்கூட சுத்தம் செய்யாமலேயே வைத்திருக்கிறார்கள். இந்த மைதானத்திற்கு அருகில் பள்ளி, இசைப்பள்ளி, காவலர் குடியிருப்பு, காவல் நிலையம், ரயில் நிலையம் என அனைத்தும் அமைந்துள்ளது.

பலமுறை இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்து விட்டோம். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு இருக்கும் தெரு விளக்கும் வேலை செய்யாது. மதில் சுவரும் உடைந்துள்ளது. கதவையும் பூட்ட மாட்டார்கள். எனவே பலர் இந்த இடத்தில் பகல் நேரத்திலேயே மது அருந்த பயன்படுத்துகிறார்கள். இதனாலேயே சிறு குழந்தைகள் இங்கு வந்து விளையாட அச்சப்படுகிறார்கள். போலீஸ் ரவுண்ட்ஸிர்க்கு வருவார்கள். அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு அவர்களும் சென்று விடுவார்கள். இதனை சுத்தம் செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். பிறகு அனைவரும் மறுபடியும் உள்ளே அமர்ந்து மது அருந்துவார்கள். இவ்வாறுதான் இங்கு நாள்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் குப்பை சேமிக்கும் குடோனின் மதில் சுவரும் உடைந்து காணப்படுவதால் அங்கிருக்கும் குப்பைகளும் மைதானத்தில் வந்து விழுகின்றன. எங்களுக்கு விளையாடுவதற்கு என்று இந்த ஒரு மைதானம்தான் இருக்கிறது. இதுவும் இப்படி இருந்தால் நாங்கள் எங்குதான் சென்று விளையாடுவது?” என வருத்தத்துடன் பேசினார்கள்.

இதற்கு நகராட்சி நிர்வாகம்தான் பதில் கூற வேண்டும். குப்பைகள் நிரம்பி வழியும் இந்த இடத்தினை செல்போனில் புகைப்படங்கள் பதிவு செய்தபோதே, கோழி இறைச்சிகளை கூடைக் கூடையாய் கொட்டிவிட்டுச் சென்றனர். “அரசு சார்ந்த கூட்டங்கள் நடத்துவதற்கு மைதானம் தேவைப்படுகிறது. ஆனால் அவற்றை சுத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் எவருக்கும் கிடையாது. மாதத்திற்கு ஒரு முறைகூட சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் இந்த மைதானத்தின் நிலை எப்போதுதான் மாறப்போகிறது எனத் தெரியவில்லை” என மக்கள் புலம்புகின்றனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமானிடம் கேட்டபோது, “நான் சிறிது நாள்கள் முன்னர் நடைபெற்ற நீட் தேர்வின்போதுதான் அங்கு சென்று பார்வையிட்டேன். அது நகராட்சி மைதானம் அல்ல… மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் மைதானம் ஆகும்.

எனவே இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கூறுங்கள். அவர்கள் சுத்தம் செய்யவில்லை என்றால், நாமே இதனை சுத்தம் செய்து விடலாம்… அவர்கள் அனுமதி கொடுத்தால். இது குறித்து நகராட்சியிடமும் முறையிட்டிருக்கிறேன்” எனக் கூறினார்.

ரயில்வே தரப்பில் கேட்டபோது, “இசை பள்ளிக்கு அருகில் இருப்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வராது. அது நகராட்சி மைதானமே. ரயில்வே அலுவலகத்திற்கு பின் அமைந்திருப்பதுதான் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் மைதானம் ஆகும்” எனக் கூறுகின்றனர்.

இவ்வாறு இரு தரப்பு அதிகாரிகளும் மாறி மாறி மற்றவர்களை கூறினால்… இதற்கு யார்தான் பொறுப்பு? தீர்வுதான் என்ன?

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *