• May 23, 2025
  • NewsEditor
  • 0

அறுபது ஆண்டுகள் கழித்து சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைத்துள்ளது இங்கிலாந்து அரசு.

நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நீண்ட நாள்கள் சர்ச்சைக்குரியதாக இருந்துவந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர். இதன் மூலம் இந்திய பெருங்கடலில் உள்ள தீவுக்கூட்டத்தில் பல தசாப்தகாலம் நீடித்துவந்த இங்கிலாந்து அரசின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. 1960களில் மொரீஷியஸ் நாடு பிரிக்கப்பட்டதிலிருந்து சாகோஸ் தீவு பிரச்னை பல மோதல்களுக்கு வழிவகுத்துள்ளது.

சாகோஸ் தீவுகள்

இவை மொரீஷியஸில் இருந்து வடகிழக்கே 2000 கி.மீ தொலைவிலும் மாலத்தீவிலிருந்து 500 கி.மீ தெற்கிலும் அமைந்துள்ளது.

இந்த தீவுக்கூட்டத்தில் வசிப்பவர்கள் என யாருமில்லை. சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கான வசதிகளும் கிடையாது. பார்வையாளர்கள் தடைசெய்யப்பட்ட பகுதியும்கூட.

ஆனால், சாகோஸ் தீவுக்கூட்டம் என்பது இந்தியப் பெருங்கடல் நடுவே வளைய வடிவிலான 60 மணல் திட்டுகள் மட்டுமல்ல, அதற்கு சூழலியல் மற்றும் ராணுவ ரீதியிலான முக்கியத்துவமும் உள்ளது.

சாகோஸ் தீவுக்கூட்டம்

சாகோஸ் தீவுகளில் மிகப் பெரிய பவளப்பாறை திட்டுகள் உள்ளன. இதன் சுற்றுவட்டரப் பகுதிகள் மீன்பிடிக்க தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு 300 வகையான பவளப்பாறைகளும் 800 வகையான மீன்களும் உள்ளன. லட்சக்கணக்கான பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்க காலத்தில் இந்த தீவுக்கு வந்து செல்கின்றன.

டியாகோ கார்சியா என்ற தீவுதான் சகோஸ் கூட்டத்தில் உள்ள மிகப் பெரிய தீவாகும். இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிலிருந்த இந்த இடத்தில் அமெரிக்க ராணுவ தளம் அமைந்துள்ளது.

இந்த ராணுவத்தளம்தான் ஐக்கிய ரச்சியத்தில் இருந்து சுமார் 9300 கி.மீ தொலைவில் இருந்தாலும் சகோஸ் தீவை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது.

டியாகோ கார்சியாவின் வரலாறு

1968ம் ஆண்டு மொரீஷியஸ் சுதந்திரம் பெற்றபோது 3 மில்லியன் யூரோக்கள் கொடுத்து சாகோஸ் தீவை வாங்கியதாக இங்கிலாந்து கூறியுள்ளது. ஆனால் சுதந்திரத்துக்கான விலையாக அதைக் கொடுக்க வற்புறுத்தப்பட்டதாக மொரீஷியஸ் கூறியது.

இதன்பிறகு இங்கிலாந்து அந்தத் தீவில் அமெரிக்கா ராணுவதளம் அமைக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கியது. அங்கு வசித்த ஆயிரக்கணக்கான பூர்வகுடி சகோஸியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, அமெரிக்க ராணுவதளம் அமைந்தது.

US Millitary Base
US Millitary Base (File Image)

அமெரிக்காவின் வியட்நாம் நாட்டுக்கு எதிரான போர், ஆப்கானிஸ்தான், இரான் ராணுவ நடவடிக்கைகளுக்காக இந்த ராணுவதளம் முக்கிய பங்கு வகித்துள்ளது.

மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் அமெரிக்காவின் ராணுவ செயல்பாடுகளுக்கு இந்த தீவு இன்றியமையாதது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தற்போது 2500 அமெரிக்க பணியாளர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்புக்கு இந்த தீவில் ராணுவ தளம் இருப்பது மிகவும் அவசியமானது எனக் கருதும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், இந்த தீவை இங்கிலாந்து 100 ஆண்டுகளுக்கு குத்தகை எடுக்கும்படியான நிபந்தனையை ஒப்பந்தத்தில் முன்வைத்துள்ளார்.

இதற்காக மொரீஷியஸுக்கு 101 மில்லியன் யூரோக்கள் (சுமார் 11 ஆயிரம் கோடி) வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். இதனால் சாகோஸ் தீவின் இறையாண்மை மொரீஷியஸ் தீவுக்கு கைமாறினாலும், இங்கிலாந்து – அமெரிக்கா ராணுவ உறவு நிலைத்திருக்கும்.

இந்தியாவின் நிலைப்பாடு

காலனியாதிக்க வரலாற்றைக் கொண்டுள்ள நாடான இந்தியா, இந்த ஒப்பந்தத்தை ஒரு ‘மைல்கல் சாதனை’ எனக் கூறி வரவேற்றுள்ளது.

காலனியாதிக்கத் தடங்களை அழிக்கும் நடவடிக்கைகளின் பகுதியாக, மொரீஷியஸ் இந்த தீவின் இறையாண்மையைப் பெறுவதற்கு இந்தியா நீண்டகாலமாக ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *