
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அருகிலுள்ள ஏலகிரி ஏரியில் மாசுபாடு ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தனர். ரயில்வே கழிவறைகள், ரயில் நிலையம், இடையம்பட்டி, ஹோட்டல் தெரு ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் இந்தக் கால்வாய் வழியாக ஏலகிரி ஏரியில் கலந்து, ஏரிக்கரையோர நிலங்களின் தன்மையைப் பாதிப்பதாகவும், விவசாயத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவதாகவும் உள்ளூர்வாசிகள் புலம்பினர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறியதாக இருந்த இந்தக் கால்வாய், கழிவுகளின் அளவு அதிகரித்ததால் அகலப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது நெகிழிப் பைகள், மது பாட்டில்கள், குப்பைகள் குவிந்து, துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உருவாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால், கால்வாய் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் ஆரம்பநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் உட்பட பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கால்வாயில் குப்பைகள் தேங்குவதால் துர்நாற்றம் தாங்க முடியவில்லை. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரயில்வே துறையினர் இயந்திரங்களைப் பயன்படுத்தி கால்வாயைச் சுத்தம் செய்கின்றனர். ஆனால், இவ்வளவு முக்கியமான இடத்தில் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு. ஏரியில் கழிவுகள் கலப்பது சுற்றுச்சூழலுக்கும், மக்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தல். உடனடி தீர்வு காண வேண்டும்” என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர்.
பொதுமக்களும், “கால்வாய் அருகே பள்ளி மற்றும் பேருந்து நிறுத்தம் இருப்பதால், மாணவர்களுக்கும் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஏலகிரி ஏரியில் கழிவுகள் கலப்பது சுற்றுச்சூழல் மாசுபாட்டை அதிகரிக்கிறது. இது விவசாயத்திற்கு மட்டுமல்ல, வாகன ஓட்டிகள் மற்றும் ரயில் பயணிகளையும் முகம் சுளிக்க வைக்கிறது. ரயில்வே துறையும் உள்ளாட்சி அமைப்புகளும் இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும்,” எனக் கோரிக்கை வைத்தனர்.

நாமும் இந்த விவகாரம் குறித்து, ஸ்பாட் விசிட் செய்து பொதுமக்களிடம் பேசி மே20-ம் தேதி, “திருப்பத்தூர்: குவியும் குப்பையால் முகம் சுளிக்கும் பயணிகள்… ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் அவலம்!“என்ற தலைப்பில் அவர்களின் சிரமங்களை சுட்டிக்காட்டியிருந்தோம். மேலும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு போயிருந்தோம்.

விகடன் செய்தி எதிரொலியாக (22/05/25) அன்று, செய்தி வெளியான மூன்றே நாள்களில் அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் குப்பைக் கால்வாயை விரைந்து சுத்தம் செய்துள்ளார்கள். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த ரயில் நிலையத்தில், மக்களின் ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க, கால்வாயை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை!