
நாட்டார்களின் எதிர்ப்பால் நூல் வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்பிச் சென்ற சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சிவகங்கை மாவட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வருகை தந்தார். அவரை சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் வரவேற்றார். பின்னர் சிங்கம்புணரி சேவுகப்பருமாள் அய்யனார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தவர், ஸ்ரீ சேவுகமூர்த்தி கோசாலை அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 10 ஆண்டு அபிவிருத்தி திட்ட தொடக்க விழாவில் கலந்துகொண்டார்.
பாரத மாடல்
குன்றக்குடி அடிகளார், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் உள்ளிட்ட பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் அங்கு நடந்த கோ பூஜை, யாக பூஜையில் கலந்துகொண்டவர் ராணி வேலு நாச்சியர் படத்தை திறந்து வைத்து, நாட்டின ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் ரேக்ளா மாட்டு வண்டிகளின் அணி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்.
விழாவில் பேசும்போது, “தமிழகம் ஆன்மீக பூமி, வீரம் நிறைந்த பூமி. பெஹல்காம் கொடும் சம்பவத்தை நீண்ட காலம் மறக்க முடியாது. ஆனால் பாகிஸ்தானின் தீவிரவாதத்தை நாம் ஆபரேஷன் சிந்தூரின் மூலம் தவிடு பொடியாக்கினோம். அதற்காக நாம் முப்படைக்கும் மரியாதை செலுத்துவோம். நமது நாட்டை, ஆன்மாவை கட்டி காத்து வருபவர் பிரதமர் நரேந்திர மோடி. பசுவை வாழ வைப்பதுபோல் விவசாயத்தையும் வாழ வைக்க வேண்டும், நிலையான நீடித்த வளர்ச்சி என்பதுதான் பிரதமர் மோடியின் கோட்பாடு. மேற்கத்திய நாடுகளின் மாடல் என்பது பேராசை கொண்ட சுரண்டல் மாடலாகும். ஆனால், நாம் வளரும்போது, நம்முடன் சேர்ந்து உலகமே வளர்கிறது. இதுதான் பாரத மாடல்” என்றார்
‘கண்டதேவி தேர்’
அதைத்தொடர்ந்து மதியம் காரைக்குடியில் ஓய்வெடுத்துவிட்டு கண்டதேவியிலுள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இப்பகுதியிலுள்ள சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் கலந்துகொண்டவர், ராம் நகரிலுள்ள தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செயப்பட்ட ‘கண்டதேவி தேர்’ குறித்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு கிளம்பினார்.

அரசியல்வாதிபோல் தமிழக அரசுக்கு எதிராக பேசியும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வரும் ஆளுநர் ஆர்.என் ரவி, அவர் சென்ற இடங்களில் அரசியல் கட்சிகள், அமைப்புகளின் ஆர்பாட்டம், கருப்புக்கொடி எதிர்ப்பையெல்லாம் கண்டுகொண்டதில்லை. ஆனால், முதல் முறையாக மக்களின் எதிர்ப்பு காரணமாக ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் திரும்பிச் சென்றுள்ளார் என்கிறார்கள்.
இதுகுறித்து தேவகோட்டை வட்டாரத்தில் உள்ள அரசுத்துறையினர், சமூக ஆர்வலர்களிடம் விசாரித்தபோது, “கண்டதேவி தேரோட்டத்தில் வடம் பிடிக்க தங்களுக்கும் உரிமை கேட்டு அப்பகுதியிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் பல ஆண்டுகளுக்கு முன் போராட்டம் நடத்தினார்கள். புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செயத பிறகு அனைத்து சாதியினரும் வடம் பிடித்து தேரை இழுக்க வேண்டும் என்றும், இதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்குப் பின்பு, கண்டதேவி கோயில் பாலாலயம் செய்யப்பட்டதாலும், புதிய தேர் செய்யும் பணி நடைபெற்றதாலும் பல ஆண்டுகள் தேரோட்டம் நடைபெறவில்லை. அதற்கு பின்பும் உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த ஆண்டு அனைத்து சாதியினரும் இணைந்து தேரோட்டம் நடத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால், அதில் தேவேந்திர குல மக்கள் அதிகம் பங்குபெறவில்லை, உயர் நீதிமன்ற உத்தரவு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் புகார் எழுந்தது.
இந்த நிலையில்தான் இவ்வளவு சென்சிடிவான கண்டதேவி தேரோட்டம் குறித்த இப்பகுதிக்கு சமந்தமில்லாத பாஜக ஆதரவாளர்கள் சிலர் தயாரித்த ஆங்கில நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள ஆளுநர் தேவகோட்டைக்கு வருகிறார் என்ற செய்தியால் இப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
‘இந்த நூல் வெளியீட்டு விழா நடக்க கூடாது ‘ என்று இப்பகுதியிலுள்ள ஊர்த்தலைவர்கள் சில நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். அதில், “192 கிராமங்களை உள்ளடக்கிய 4 நாடுகளைச் சேர்ந்த நாங்கள் சாதி மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் ஏற்பட்ட சிறு பிரச்னையால் எங்களுக்கு பாத்தியப்பட்ட கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் சில ஆண்டுகள் தேர் ஓடவில்லை. அதன்பின்பு உயர் நீதிமன்ற தலையீட்டால் அனைவரும் ஒற்றுமையாக தேர் இழுத்து வருகிறோம்.
இந்த நிலையில் எங்கள் 4 நாடுகளுக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் எங்களிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல் கண்டதேவி தேர் குறித்து நூல் எழுதி அதை ஆளுநர் வெளியிட உள்ளதாக கேள்விப்படுகிறோம். இந்த நூல் எங்கள் 4 நாட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். சாதிக்கலவரத்தைத் தூண்டும். அதனால் இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், இன்னும் சில நாட்களில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் பிரச்சனையை உண்டாக்கும் இந்த நூல் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்” என்றனர்.
.

இந்த தகவல் காவல்துறை மற்றும் உளவுத்துறை, சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் மூலம் ஆளுநர் கவனத்துக்கு சென்றதால் வேறு வழியில்லாமல் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய ஆளுநர் ஒத்துக்கொண்டார் என்று சொல்கிறார்கள்.