
மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் அருகில் உள்ள செளசாலா வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கடந்த 15ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் எரிந்து கிடந்த நபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு இறந்து கிடந்தவர் அணிந்திருந்த சட்டை மூலம் கொலை செய்யப்பட்டவர் பெயர் சாந்தனு தேஷ்முக் என்று தெரிய வந்தது.
சாந்தனு யவத்மாலில் உள்ள சன்ரைஸ் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியது தெரிய வந்தது. அதே பள்ளியில் சாந்தனுவின் மனைவி நிதி தேஷ்முக் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். விசாரணையில் இருவரும் காதலித்து திருமணம் செய்திருந்தனர். பெற்றோர் ஆதரவு இல்லாமல் தனியாக வசித்து வந்தனர்.
அதிர்ச்சி தந்த கொலை வழக்கு
போலீஸார் கொலை செய்யப்பட்ட சாந்தனுவின் நண்பர் உட்பட அனைத்து தரப்பினரிடமும் விசாரித்தனர். விசாரணையில் சாந்தனு மனைவி நிதி தேஷ்முக் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நிதியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தனது கணவனை கொலை செய்ததை நிதி ஒப்புக்கொண்டார். நிதியிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்தது.
சாந்தனுவும், நிதியும் காதலித்து திருமணம் செய்த புதிதில் நன்றாகவே வாழ்ந்துள்ளனர். அதன் பிறகு சாந்தனு மது பழக்கத்திற்கு அடிமையானார். அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தனது மனைவியை அடித்து உதைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரின் சித்ரவதை தாங்க முடியாமல் சாந்தனுவை கொலை செய்ய நிதி முடிவு செய்துள்ளார். சாந்தனுவை கொலை செய்ய ஆன்லைனில் மருந்தை தேடி அதனை உள்ளூரில் வாங்கி அதனை வைட்டமீன் மாத்திரை என்று கூறி தனது கணவனை சாப்பிட செய்துள்ளார். அதனை விஷம் என்று அறியாமல் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சாந்தனு இறந்து போனார்.
உதவிய மாணவர்கள்?
இதையடுத்து உடலை அப்புறப்படுத்த என்ன செய்வது என்று நிதி தேஷ்முக் ஆலோசித்தார். நிதி தேஷ்முக் தான் பணியாற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலருக்கு டியூசன் நடத்தி வந்தார். அவர்களில் மூன்று பேருக்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்தார். அவர்களிடம் உணர்ச்சிப்பூர்வமாக பேசி உடலை அப்புறப்படுத்த உதவும் படி கேட்டுக்கிண்டார். அவர்களும் ஆசிரியை உதவி கேட்டதால் தட்ட முடியாமல் உடலை அப்புறப்படுத்த உதவ சம்மதித்தனர். இதையடுத்து சாந்தனுவின் உடலை நான்கு பேரும் வாகனம் ஒன்றில் ஏற்றி செளசாலா வனப்பகுதிக்கு எடுத்துச்சென்று போட்டுவிட்டு வந்திருந்தனர்.

அடுத்த நாள் நிதி தேஷ்முக் மட்டும் மீண்டும் உடலை போட்ட இடத்திற்கு சென்று பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு வந்திருப்பது தெரிய வந்தது. அப்படியே விட்டால் கொலை செய்யப்பட்ட நபர் யார் என்று கண்டுபிடித்துவிடுவார்கள் என்று கருதி உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக போலீஸ் விசாரணையில் நிதி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நிதி கைது செய்யப்பட்டார். உடலை அப்புறப்படுத்த உதவிய மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். திரைப்படத்தையே மிஞ்சும் அளவுக்கு திட்டமிட்டு கணவனை மனைவி கொலை செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.