
சுவிட்சர்லாந்தின் ஆல்பைன் என்ற மலைத்தொடருக்கு அருகே உள்ள கிராமத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் இருந்த மக்களை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தெற்கு வாலெய்ஸ் மாகாணத்தில் (மாநிலம்) உள்ள பிளாட்டனில் வசிக்கும் 90 -க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவுகள் ஏற்பட்டு பாறைகள் விழும் அபாயம் உள்ளதாக கூறிய வாலெய்ஸில் உள்ள அதிகாரிகள், இரண்டு பகுதிகளைத் தவிர, ஆல்பைன் கிராமத்திலிருந்து மக்கள் மற்றும் கால்நடைகள் என சுமார் 300 பேரை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
சுவிஸ் அதிகாரிகள் கால்நடைகளையும் வெளியேற்றப்பட்டவர் பட்டியலில் சேர்த்தனர்.
பிளேட்டனில் அபாயமுள்ள இடத்திலிருந்து பசுமாடு ஒன்றை பாதுகாப்பாக ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். இந்த சம்பவம் வலைதளங்களில் வைரலாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.
வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் கால்நடைகள் மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கு எப்போது திரும்புவார்கள் என்பது குறித்து தற்போது தகவல்கள் ஏதும் தெரியவில்லை.
செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய பிளேட்டனை சேர்ந்த மேயர் மத்தியாஸ் பெல்வால்ட், “தெற்கு லோட்சென்டல் பள்ளத்தாக்கிலிருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் கால்நடைகளும் சனிக்கிழமை முதல் விரைவாக அபாயமுள்ள பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்” என்பதை குறிப்பிட்டு சமூகத்தின் ஒற்றுமையை பாராட்டினார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய லோட்சென்டல் நெருக்கடி மையத்தின் செய்தித் தொடர்பாளரான ஜோனாஸ் ஜெய்ட்சினர், “மொத்தம் 190 செம்மறி ஆடுகள், 26 மாடுகள் மற்றும் 20 முயல்கள் அபாய இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டது” என்று கூறினார்.
மேலும், செவ்வாயன்று, காயமடைந்த பசுவான ‘லோனி’ ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்டதாகவும் பகிர்ந்தார்.
இயற்கை பேரழிவுகள் குறித்து நிபுணத்துவமாக ஆராயும் அப்பகுதி பொறியாளர் அல்பன் பிரிகர், மூடுபனி மற்றும் மேகமூட்டமான சூழ்நிலைகள் சுற்றுச்சூழல் குறித்த துல்லியமான கணிப்பை கடினமாக்கியதாக கூறினார்.
மேலும், நிலையற்ற பாறை மற்றும் பனிப்பாறை முக்கிய கவலைகளாக இருப்பதாகவும், குறிப்பாக, விழும் பாறைகளால் பனிக்கட்டித் திரள்கள் அதிகமாக வெளியேறும் வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.
முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அல்பன் பிரிகர், அப்பகுதியில் இதுவரை சிறந்த சூழல் நிலவுவதாக தெரிவித்திருந்தார்.
பல சிறிய மண்சரிவுகள் ஏற்பட்டாலும், 1.5 மில்லியன் கன மீட்டர் (52 மில்லியன் கன அடி) அளவிலான பெரிய மண் ஒரே நேரத்தில் கீழே இறங்கவில்லை எனவும் கூறியிருந்தார்.
2023 ஆம் ஆண்டில், கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள பிரைன்ஸ் கிராமத்தில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஒரு பெரிய பாறை மலைச்சரிவில் சரிந்ததால் இந்நிகழ்வு நடந்தது.
மேலும், பாறை சரிவு ஏற்படும் அபாயம் நிலவியதால், அச்சுறுத்தல் காரணமாக பிரைன்ஸ் மக்கள் கிராமத்திலிருந்து கடந்த ஆண்டு வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.