
வெளிநாட்டில் படிக்க ஆசைப்படும் இந்திய மாணவர்களின் சாய்ஸ்களில் ஒன்று, ‘கனடா’.
ஆனால், கனடாவில் எடுக்கப்படும் கொள்கை மாற்றங்களால், ‘இது இனி தொடருமா?’ என்கிற சந்தேகம் எழுகிறது.
ஏன்… என்ன ஆனது?
மேலே கூறியிருப்பதுப்போல, இந்திய மாணவர்கள் அதிகம் படிக்கும் வெளிநாடுகளில் ஒன்று, ‘கனடா’. 2023-ம் ஆண்டு, வெளிநாட்டினர் அதிகளவில் கனடாவில் குடியேறுவதை தடுக்க, கடும் சட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. காரணம், அதிகம் குடியேறும் வெளிநாட்டினரால், கனடாவில் வீட்டு வாடகை, போக்குவரத்து போன்றவற்றிற்கு கட்டணம் உயர்ந்துகொண்டே போகிறது. இதனால், கனடா நாட்டு மக்கள் பெரியளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
2023, 2024!
தற்போது வெளிநாட்டினர் கனடாவில் குடியேறுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வெளிநாட்டு மாணவர்களுக்கு கடும் கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி கனடாவில் குடியேறும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
2023, 2024 ஆண்டுகளில் முறையே 6,81,155 வெளிநாட்டு மாணவர்கள், 5,16,245 வெளிநாட்டு மாணவர்கள் கனடாவில் அனுமதிக்கப்பட்டனர்.
2023-ம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட 6,81,155 வெளிநாட்டு மாணவர்களில் 2,78,045 பேர் இந்திய மாணவர்கள். 2024-ம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட 5,16,245 வெளிநாட்டு மாணவர்களில் 1,88,465 பேர் இந்திய மாணவர்கள்.
இந்த இரண்டு ஆண்டு தரவுகளிலேயே வெளிநாட்டு மாணவர்களின் அனுமதி எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்று நன்கு தெரிகிறது.
31 சதவிகிதத்திற்கு குறைந்த…
கடந்த ஆண்டு முதல் பாதியில், 44,295 இந்திய மாணவர்களுக்கு கனடாவில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டின் அதே காலக்கட்டத்தில் 30,640 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. இது கிட்டதட்ட 31 சதவிகிதம் குறைவு ஆகும். இந்தத் தரவுகளை கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை (IRCC) அமைச்சகம் வழங்கியுள்ளது.
என்னென்ன கெடுபிடிகள்?
இனி கனடா கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேருவது அவ்வளவு எளிதல்ல.
கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்கள், அதற்கு தேவையான 20,635 கனடா டாலர்களை (கிட்டதட்ட ரூ.12.7 லட்சத்தை) கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதற்கான ஆவணங்களை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கனடா கல்வி நிறுவனங்கள் அங்கே படிக்க வரும் மாணவர்களின் ஒப்புதல் கடிதத்தை கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை மூலம் சரிப்பார்க்க வேண்டும்.
கனடாவில் படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பம் ஏற்கனவே இருந்ததை விட, இப்போது மிகவும் கண்டிப்பான முறையில் பரிசீலிக்கப்படும்.
மார்க் கார்னி என்ன சொல்கிறார்?
கனட பிரதமர் மார்க் கார்னிவை பொறுத்தவரை, 2028-ம் ஆண்டிற்குள் கனடாவின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இருப்பதுப்போல ஆக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளாராம்.