• May 23, 2025
  • NewsEditor
  • 0

கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ஷனில். 49 வயதான இவர் கடந்த பிப்ரவரி மாதம் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதற்குப் பிறகு அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர், மீண்டும் மருத்துவரை அணுகியிருக்கிறார். மருத்துவர் வலி நிவாரணி மருந்துகளை வழங்கியும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் சோர்ந்துபோன அவர், வேறு ஒரு மருத்துவரை சந்தித்து ஆலோசித்திருக்கிறார். அப்போதுதான் அவர் தலையில் நெக்ரோட் ஃபாசிடிஸ் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இது முடி மாற்று அறுவை சிகிச்சை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர் தெரிவித்திருக்கிறார்.

முடி மாற்று அறுவை சிகிச்சை

நெக்ரோட் ஃபாசிடிஸ்

நெக்ரோட் ஃபாசிடிஸ் என்றும் அழைக்கப்படும் இது ஒரு அரியவகை, பரவும் பாக்டீரியா தொற்று. இது சதை உண்ணும், உயிருக்கு ஆபத்தான பாக்டீரியா. இது ஒருவருக்கு பரவுகிறது என்றால், ஆரம்ப அறிகுறிகளில் கடுமையான வலி, அதிக காய்ச்சல் ஏற்பட்டு வேகமாக பரவும். உடனடி மருத்துவம், அவசர அறுவை சிகிச்சை மட்டுமே அதை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி. இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஷனில் தலையில் சுமார் 13 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது.

அதில் தொற்றுக்கு சிகிச்சையளிக்க ‘தோல் ஒட்டு அறுவை சிகிச்சை’யும் அடங்கும். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு மண்டை ஓட்டின் சில பகுதிகள் தெரியும். முழுமையான குணமடைய கூடுதல் சிகிச்சை தேவை. முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சையை நடத்திய மருத்துவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஷனில் தெரிவித்திருக்கிறார்.

பாக்டீரியா
பாக்டீரியா

தொற்று ஏன் ஏற்பட்டது?

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, முடி மாற்று அறுவை சிகிச்சை பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், ஒவ்வொரு செயல்முறையிலும் சில ஆபத்துகளும் இருக்கின்றன. முடி மாற்று அறுவை சிகிச்சை பெறுபவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இதுபோன்ற தொற்றுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு 2 முதல் 5 நாட்களுக்குள் தொற்றுகள் ஏற்பட்டுவிடும். அறுவை சிகிச்சையின் போதோ அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகோ நுண்ணுயிரிகள் அல்லது நோய்க்கிருமிகள் உங்கள் உடலில் நுழையும் போது தொற்று ஏற்படலாம்.

பாதுகாகாப்பாக இருக்க சில வழிகள்

எப்போதும் நல்ல சுகாதாரமாக இருக்கும், அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைக்குச் செல்வதை தேர்வு செய்யுங்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு காயங்களைத் தொடுவதோ, அல்லது தோலை பிரிப்பாதையோ தவிர்க்கவும்.

மருத்துவர்கள் வரச் சொல்லும் நாளில் கட்டாயமாக மருத்துவ பரிசோதனைக்கு செல்லுங்கள். அறுவை சிகிச்சைகக்கு முன் – பின் பராமரிப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றுங்கள். குணமடையும் வரை மது, புகை போன்ற அனாவசியங்களை தவிருங்கள் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *