
‘அமெரிக்க அரசுக்கும், அதன் கொள்கைகளுக்கும் எதிராக யாரும் குரல் கொடுக்கக்கூடாது’ என்பதில் உறுதியாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
அதன் விளைவாக, சில மாதங்களுக்கு முன்பு, “அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் அரசுக் கொள்கைகளுக்கு எதிராக எந்தப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. மீறினால், அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர்கள் மேலும் படிப்பதற்கு தடை செய்யப்படும். வெளிநாட்டு மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் அல்லது அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்” என்று ட்ரம்ப் உத்தரவிட்டார்.
மேலும், “எந்தக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்ளோ, அந்தக் கல்வி நிறுவனத்திற்கு அரசு நிதி உதவி தடை செய்யப்படும். நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்றும் கூறினார் ட்ரம்ப்.
அரசை எதிர்த்த ஹார்வார்டு பல்கலைக்கழகம்!
இந்த நிலையில், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டம், இனப் பாகுபாடு எதிர்ப்பு போன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், வெளிநாட்டு மாணவர்களின் தகவல்களை வழங்குமாறு அரசு கூறியதற்கு, அதைப் பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது.
இதனையடுத்து, முதலில், அந்தப் பல்கலைக்கழகத்திற்கு சென்று கொண்டிருந்த அரசின் நிதியை நிறுத்தியது ட்ரம்ப் அரசு.
இப்போது, வெளிநாட்டு மாணவர்கள் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் இருந்து விலகி, வேறு கல்வி நிறுவனங்களில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் என்ன செய்யலாம்?
இந்த செமஸ்டரோடு படிப்பை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பிற மாணவர்கள் கட்டாயம் வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாற வேண்டும். இல்லையெனில், அவர்கள் அமெரிக்காவில் தங்கி படிக்கும் உரிமையை இழப்பார்கள் என்று எச்சரித்துள்ளது அரசு.
மேலும், இந்த ஆண்டு புதிய மாணவர்கள் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வந்து சேர முடியாதவாறு, வெளிநாட்டு மாணவர்கள் சேரும் பல்கலைக்கழகப் பட்டியலில் இருந்து அந்தப் பல்கலைக்கழகத்தின் பெயரை நீக்கியுள்ளது ட்ரம்ப் அரசு.
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் இணையதளத் தரவுகளின் படி, தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 500 – 800 இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்.

ட்ரம்ப் அரசு என்ன எதிர்பார்க்கிறது?
ஒருவேளை, அரசின் சட்டத் திட்டத்திற்கு அடுத்த 72 மணிநேரத்திற்குள், ஹார்வார்டு பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டால், அது முன்பு போலவே இயங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஏன் பல்கலைக்கழகம் கொடுக்க மறுக்கிறது?
ட்ரம்ப் அரசு மாணவர்களின் தகவல்களைக் கேட்பதோடு நில்லாமல், பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின் ஆடியோ மற்றும் வீடியோக்களையும் கேட்கிறது.
மாணவர்களின் தகவல்கள் என்பது தனிப்பட்ட உரிமை. அதை பகிர்வதை விரும்பவில்லை பல்கலைக்கழகம். மேலும், ஆடியோ, வீடியோக்களை அனுப்பினால், அதன் மூலம் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ட்ரம்ப் அரசு கடும் நெருக்கடியை கொடுக்கலாம் என்பதாலும் மறுத்து வருகிறது.