
அமிர்த பாரத் (Amrit Bharat Station) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக, அந்த திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
இதில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திருச்சி எம்.பி துரை வைகோ, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், பொதுமக்கள், பா.ஜ.க-வினர் உள்ளிட்ட பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீரங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, “திருச்சி மாவட்டத்தில் மிகச்சிறந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பேருந்து நிலையம் திறக்க காரணமாக இருந்த மாவட்ட ஆட்சியர், பேருந்து நிலையத்தை திறந்த முதலமைச்சர் உள்ளிட்டோருக்கும் அதேபோல திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய முதலமைச்சருக்கும் நன்றி” என்று பேசினார்.

அப்போது, பழனியாண்டி பிரதமருக்கு நன்றி தெரிவிக்கவில்லை என கூறி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க பிரமுகர் திருவேங்கடம் என்பவர் திடீரென எழுந்து பழனியாண்டி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, “பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவியுங்கள்” என கூறினார்.
அதைக்கேட்ட எம்.எல்.ஏ பழனியாண்டி, “யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும். நீ உட்கார்” என்று கூற, கார சார வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.