• May 22, 2025
  • NewsEditor
  • 0

அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “தமிழக அரசால் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் மதுபானங்கள் புதுச்சேரி மாநிலத்தில் போலியாக தயாரிக்கப்படுகிறது. அதன்பிறகு தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களால், அதே டாஸ்மாக்கில் அந்த போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

புதுச்சேரியில் இருந்து தினசரி குறைந்தது ஒருகோடி ரூபாய்க்கு மேல் போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஒருகோடி என்றால், மாதத்திற்கு 30 கோடி ரூபாய். ஆண்டுக்கு சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்கு புதுச்சேரியில் இருந்து போலி மதுபானம் தயாரித்து கடத்தப்படுகின்றது.

புதுச்சேரி அரசு

கடந்த 10 தினங்களுக்கு முன்பு இப்படி கடத்தப்பட்ட போலி டாஸ்மாக் மதுபானம், புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டது என தமிழக கலால்துறை கண்டுபிடித்தது. அது தொடர்பாக யார் யார் மீது வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர் என்பது தெரியவில்லை. டாஸ்மாக்கில் தமிழக தி.மு.க ஆட்சியாளர்களால் நடத்தப்படும் ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, இந்த வழக்கு குறித்தும் விசாரணை செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அரசுக்கு மருத்துவ இடங்களை கொடுக்காமல் இருக்கின்றன. மீதமுள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 650 இடங்களில், 50 சதவிகித இடங்களான 325 இடங்கள் அரசுக்கு வழங்க வேண்டும்.

ஆனால் ஆட்சியில் உள்ளவர்கள் அதைப் பெறாமல் புதுச்சேரி மாணவர்களை வஞ்சித்து வருகின்றனர். இந்த ஆண்டும் அதே நிலை நீடிக்கிறது. முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் அரசின் 50 சதவிகித இடங்களைப் பெறாமல், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளை அழைத்துப் பேசி வருவது தேவையற்ற ஒன்றாகும்.

தேசிய மருத்துவக் கவுன்சிலின் ஆணைப்படி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். கடந்த காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் 50 சதவிகித இடங்களைப் பெறாமல், வெறும் 36 சதவிகித இடங்களைப் பெறுவது புதுச்சேரி மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். முந்தைய துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், அரசுக்குரிய 50 சதவிகித இடங்களைப் பெறுவதற்கு முயற்சி எடுத்தார்.

முதல்வர் ரங்கசாமி

அதேபோல் தற்போதைய ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் இருந்து அரசுக்கு வர வேண்டிய 50 சதவிகித மருத்துவ இடங்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அந்தஸ்து சம்பந்தமாக சுயேட்சை எம்.எல்.ஏ நேரு அவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. முன்னாள் முதலமைச்சர்கள் நாராயணசாமி, வைத்திலிங்கம் ஆகியவர்கள் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என சுயேட்சை எம்.எல்.ஏ கொடுக்கும் மனுவில் கையெழுத்து போட்டிருக்கின்றனர்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி  அதிகாரத்தில் இருந்த போது மாநில அந்தஸ்து பெற்று தராதவர்கள் தற்போது மாநில அந்தஸ்திற்காக  துளிகூட வெட்கமே இல்லாமல்  கையெழுத்து போடுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *