
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து, சமூகவலைதளங்களில் ஆக்டிவாக வலம் வந்தார். சமூகவலைதளங்களில் விஜய் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக பேட்டியளித்து பிரபலமானார்.
ஆனால், கட்சியில் தான் உள்பட எந்தப் பெண்ணுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று கூறி வைஷ்ணவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தவெகவில் இருந்து விலகினார். அவருக்கு பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து அழைப்பு சென்றது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் வைஷ்ணவி இன்று மாலை திமுகவில் இணைந்தார். கோவை கொடிசியா பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வைஷ்ணவி, “இளைஞர்களை ஊக்குவிப்பார்கள் என்பதால் தவெகவில் ஓராண்டுக்கு மேல் பணியாற்றினேன். ஆனால், அங்கு அப்படி நடக்கவில்லை.
ஏராளமான இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிருப்தி தான் மிஞ்சியது. பாஜகவின் மற்றொரு முகமாக தான் தவெக உள்ளது. இனி என் மக்கள் பணி திமுகவில் தொடரும். “என்றார். வைஷ்ணவியுடன் மேலும் சில இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்வில் கோவை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். வைஷ்ணவி திமுக குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அவரின் அம்மா திமுக கவுண்டம்பாளையம் பகுதி மகளிரணி அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.