• May 22, 2025
  • NewsEditor
  • 0

நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்தே, அதில் பயணிக்கும் நத்தம் சிவசங்கரன் தற்போது மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வகிக்கிறார். ஆனால் அண்மைகாலமாக கட்சி நடவடிக்கைகளிலிருந்து அவர் ஒதுங்கியிருப்பதாக தகவல்கள் வரவே.. அவரை தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தேன்!

“நா.த.க தலைமைமீது நீங்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டாலும், கோவை நா.த.க நிகழ்வில் பங்கேற்றிருக்கிறீர்கள்.. கட்சி பணிக்கு மீண்டும் திரும்பிவிட்டீர்களா?”

“மே 18-ம் தேதி நடந்த இனப்படுகொலை நாள் பொதுக்கூட்டத்தில் `இன உணர்வுமிக்க ஒன்றுகூடல்` என்கிற அடிப்படையில் பங்கேற்றேனே தவிர, கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தேர்தல் பணி செய்யும் மனநிலையில் நான் இல்லை. லீக்கான ஆடியோவில் என்னை பற்றி தரக்குறைவான அண்ணன் சீமானின் பேச்சை எளிதாக கடந்துசெல்ல முடியவில்லை. அவரே நேரடியாகப் பேசி விளக்கம் அளிக்கும்வரை கட்சி பணிக்கு திரும்புவதாக இல்லை”

சீமான்

“கட்சியிலேயே இருந்துகொண்டு தலைமையையும் விமர்சித்துக் கொண்டிருப்பது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இல்லை என்கிறார்களே!”

“நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை வலிமைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு வலுவிழக்கச் செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டுவதை கடமையாக பார்க்கிறேன். பதவியை பிரித்துக் கொடுக்கிறோம் என்கிற அதிகாரத்தை குறைத்து பொறுப்பாளர்களின் எண்ணிக்கையை சகட்டுமேனிக்கு அதிகரிப்பது மிகத் தவறானது. ஆனால் கட்சியின் ஒவ்வொரு நிர்வாகிகளும் இன உணர்வுடன் பணியாற்றுகிறவர்கள். அவர்கள்மீது எந்த குற்றம் குறையையும் சொல்லிவிட முடியாது”

சீமான், விஜய்

“2026-ல் நா.த.க பேரெழுச்சி பெறும் என்ற முனைப்புடன் தேர்தல் பணிகளை தொடங்கியிருக்கிறார்களே!”

“2026-ல் நா.த.க பெறும் வாக்குகள் என்பது விஜய்யின் கூட்டணி முடிவை பொறுத்தே அமையும். புதிய தலைமுறை வாக்காளர்களை குறிவைத்து த.வெ.க தனித்து போட்டியிட்டால் அது நா.த.க-வுக்கு சிக்கல்தான். எனவே இப்போதே கணிக்க முடியவில்லை”

நாதகவின் தேர்தல் சின்னம்

“நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் விவசாயம் சின்னம் கிடைத்ததை மகிழ்ச்சியுடன் வரவேற்காமல் அதையும் சந்தேகிப்பது ஏன்?”

“கடந்த காலங்களில் நாம் தமிழர் கட்சி கோரிய எந்த சின்னத்தை தராத இந்திய தேர்தல் ஆணையம், இப்போது கட்சித் தரப்பில் வரைந்து கொடுக்கும் சின்னத்துக்கு ஒப்புதல் கிடைக்கிறதெனில் இதன்பின்னே பா.ஜ.க இருப்பதாக சந்தேகம் எழுப்பப்படுகிறது. அப்படியிருந்தாலும் அண்ணன் சீமான் பா.ஜ.க-வை பயன்படுத்தி கட்சியை வளர்ப்பாரே தவிர… அவரை பா.ஜ.க-வால் பயன்படுத்த முடியாது”

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்
வேல்முருகன்

“தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சாயலில் பேசுகிறீர்களே.. அங்கே இணையும் சூழல் அமைந்துவிட்டதாக தெரிகிறதே!”

“அப்படியில்லை, காங்கிரஸ் அங்கம் வகிக்கும் தி.மு.க கூட்டணியில் அவர் இடம்பெற்றிருப்பதில் எனக்கு வருத்தம் இருந்தாலும் அண்ணன் வேல்முருகன்மீது பேரன்பு உண்டு. அவரது கட்சியினர் மட்டுமின்றி மாற்றுக் கட்சியினருக்கு ஒரு ஆபத்து என்றாலும் முன்நிற்பவராக இருக்கிறார். நேர்மையும் எளிமையுமான ஒரு தலைமை பண்பை கொண்டிருக்கிறார். எம்.எல்.ஏ பதவியை வைத்து தன்னால் முடிந்தளவுக்கு மண், இயற்கை வளத்தை காக்கும் மக்கள் அரசியலை மேற்கொள்கிறார்”

“நீங்கள் தலைமையேற்றிருக்கும் சீமானும் அப்படித்தானே..!”

“அவர் பாதிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியினருக்கே உதவ மாட்டாரே.. பொதுப் பிரச்னைக்காக சிறை சென்ற எனக்காக அறிக்கைகூட வெளியிடவில்லை. ஆனால் கட்சிகளுக்கு அப்பாற்ப்பட்டு துணை நிற்கக் கூடியவர் வேல்முருகன். சில விஷயங்களில் அண்ணன் சீமானைவிட த.வா.க வேல்முருகன் ஒருபடி மேல்”

நாதக நத்தம் சிவசங்கரன்

“உங்கள் அடுத்தக்கட்ட நகர்வுதான் என்ன?”

“காலம்தான் பதில் சொல்லும்”

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *