
‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றி வருகிறார். பல இடங்களில் ‘தக் லைஃப்’ குழுவினர் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
நேற்று கொச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கமல் ஹாசன் பேசுகையில், ” ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நிறைய திறமையான ஆட்கள் வேலை பார்த்திருக்கிறார்கள். முக்கியமாக, ரஹ்மான், ரவி.கே. சந்திரன் போன்ற பலரும் இருக்கிறார்கள்.
“மருதநாயகம்’ திரைப்படம் வந்திருந்தால், இந்நேரம் ரவி இங்கு இருந்திருக்க மாட்டார். சர்வதேச சினிமாக்களில் இருந்திருப்பார். அவர் இங்கு இருப்பதில் எனக்குத்தான் ரொம்ப சந்தோஷம்.
‘தக் லைஃப்’ திரைப்படத்தின் சவுண்ட் மிக்ஸிங் என்னுடைய புதிய ஸ்டூடியோவில்தான் நடந்தது. அது எனக்கு பெருமை. இந்தப் படத்தில் பாடியுள்ள அனைத்து பாடகர்களும் ரொம்பவே திறமை வாய்ந்தவர்கள்.
நானும் சில வரிகள் பாடியிருக்கிறேன். அதுமட்டுமல்லாமல், பாடல் எழுதியும் இருக்கிறேன். ‘தக் லைஃப்’ திரைப்படம் பழைய மற்றும் புதிய திறமைகளை ஒன்று சேர்த்து பண்ணிய ஒரு படம். நான் எப்போதும் விமர்சனங்களைத்தான் முதலில் வரவேற்பேன். காந்தியின் சிந்தனையில் வன்முறை இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் வாழ்க்கையில் அப்படி இருக்க முடியாது. அந்த வன்முறையை எப்படியான தைரியத்துடன் நீங்கள் கையாளப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
மார்ட்டின் லூதர் கிங், மண்டேலா எல்லோருமே காந்தியின் ரசிகர்கள். நானும் தான். நானும் இங்கு சிறந்தவராக மாறுவதற்குத்தான் வந்துள்ளேன். சினிமாவுக்கு நல்ல நடிகர்கள்தான் தேவை.
இன்று நாம் ஒருவரைக் கதாநாயகனாகச் சொல்வோம், ஆனால் நாளை அவர்கள் வில்லனாக மாறலாம். இது எல்லாத் துறைகளிலும் பொருந்தும்.
என்னை இன்னும் 100 வருடம் கதாநாயகனாக நினைவு வைத்திருப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.” எனக் கூறியிருக்கிறார்.