• May 22, 2025
  • NewsEditor
  • 0

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நடந்துவரும் போரில் காஸா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 2, 2025 அன்று காஸாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியது. அதனால் தற்போது இஸ்ரேலின் ராணுவத்தால் காஸா பகுதிக்குள் செல்லும் உலக நாடுகளின் உதவிகள் தடுத்து நிறுத்தப்படுவதாக ஐ.நா குற்றம்சாட்டியது. அது தொடர்பாக ஐ.நா-வின் மனிதாபிமான உதவிகள் அமைப்பின் தலைவர் டாம் பிளெட்சர், “காஸாவில் உதவித் தேவைப்படுபவர்கள் அதிகமிருக்கிறார்கள்.

காஸா

பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து உள்ளிட்டக் குறைபாடுகளாலும், போரால் ஏற்பட்ட காயங்களாலும் மரணப்பிடியில் இருக்கின்றனர். 14,000 குழந்தைகளின் உயிர் ஆபத்தில் இருக்கிறது. சரியான நேரத்தில் உதவிகளை வழங்க வேண்டும் என கடுமையாகப் போராடுகிறோம். ஆனால், உதவி வழங்குபவர்களுக்கும் ஆபத்தான சூழலே இருக்கிறது. தற்போது உலக நாடுகளின் உதவி காஸாவுக்கு அவசியம்” என வெளிப்படையாகப் பேசினார்.

இந்த நிலையில், சீனா காஸா பகுதிக்குள் வான் வழியே உதவிகளை வழங்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. அது உண்மைதானா என்றக் கேள்விகளும் ஊடகத்தில் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக DW செய்தி நிறுவனத்தின் உண்மை சரிபார்ப்புக் குழு அந்த வீடியோவை சரிபார்த்தது. அது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில், “காஸாவுக்கு அதிக உதவிகள் தேவை என்ற கோரிக்கையைத் தொடர்ந்து பல்வேறு போலி, தவறான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.

UN

இதில் சீனா வான் வழியே உதவிகள் வழங்குவது போன்ற வீடியோ அதிகம் விவாதத்துக்குள்ளானது. அந்த வீடியோ மே 17, 2025 அன்று எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டு, சுமார் 10,000 பார்வையாளர்களை சென்று சேர்ந்திருக்கிறது. அந்த வீடியோவை சோதித்தபோது, இஸ்ரேலின் தாக்குதலால் நிலைகுலைந்திருக்கும் காஸா பகுதிதானா அது? காஸாவின் எந்தப் பகுதி அது என்பது உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அசல் வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதை புவியியல் ரீதியாகவும், பாலஸ்தீனம் வழங்கியிருக்கும் குறைந்த அனுமதியின் மூலம் வடிவமைக்கப்பட்ட கூகுள் ஸ்ட்ரீட் மூலமும் கண்டறிய முயற்சித்தோம்.

இந்த வீடியோ பதிவிட்டப் பெண் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். அவர் 2011-ம் ஆண்டு எக்ஸ் பக்கத்தை தொடங்கியிருக்கிறார். இதே வீடியோ ஏப்ரல் 1-ம் தேதி டிக்டாக் செயலியில் பகிரப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் கூட அந்த உதவிகள் குறித்த எந்தத் தகவலும் இல்லை. கருத்துப் பெட்டியில் மட்டுமே இது சீனாவின் உதவி எனப் பேசப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்தடுத்த நாள்களில்தான் இந்த வீடியோவின் பல்வேறு பகுதிகளில் எடிட் செய்யப்பட்டு வைரலானது.

லாரி மூலம் பிப்ரவரி 19ம் தேதி சீனா காஸாவுக்கு உதவிகள் அனுப்பியது. அதற்குப் பிறகு சீனா எந்த உதவிகள் வழங்கியதாகவும் தகவல் இல்லை. எனவே பகிரப்படும் அந்த வீடியோ போலி என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த முடியும்!” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *