
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் கூட்ரோடு அருகே, நான்குவழிச் சாலை அமைத்து சில வருடங்கள் ஆகிறது. இந்த நெடுஞ்சாலையை (179A) ஆம்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை செல்ல வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வரும் நிலையில், விபத்துகள் தொடர்ந்து நேர்ந்து வருகிறது. முக்கியமாக வாகனங்கள் திசை மாறி செல்லும் இடத்தில் எந்த ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் இல்லாமல் ஆபத்தான சூழல் நிலவிக் காணப்படுகிறது.
காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள், வெளியூருக்கு வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் அனைவரும் இங்கு நின்றுதான் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரித்தபோது, ‘நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் மிகவும் வேகமாக வருகிறது. சென்னையை நோக்கி வாகனங்கள் செல்லும் போது அதேசமயம் எதிர்த் திசையில் திருப்பத்தூருக்குச் செல்வதற்கு வாகனங்கள் முந்துகின்றன. இடது பக்கம் நாட்டறம்பள்ளி செல்வதற்கான மேம்பாலம் உள்ளதால் ஒரே சமயம் வாகனங்கள் அனைத்தும் உள்ளே நுழைகின்றன.
சிறிது தொலைவிற்கு முன்னரே வேகத்தைக் குறைத்து வர வேண்டும். ஆனால் ஒரு சிலர் எதையும் பொருட்படுத்தாமல் வருவதால் இங்கு அதிகம் விபத்துகள் நடந்து வருகிறது. அதாவது சொல்லப் போனால் வாரத்திற்கு ஒரு விபத்து குறையாமல் நடக்கிறது. இது போன்ற சூழல் உள்ளதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையைக் கடக்காமல் பல முறை திக்குமுக்காடுகின்றோம்.

அண்மையில்கூட பைக் மற்றும் வேன் மோதி பெரும் விபத்து நேர்ந்து, அப்பகுதியைக் கதிகலங்க வைத்தது. இது போன்று இங்கு பல அசம்பாவிதங்கள் நடந்தேறுகிறது. விபத்துகளைத் தடுத்து வாகனங்கள் பாதுகாப்புடன் செல்ல அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாகத் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, “இத்தகைய நிலைமை பல இடங்களில் உள்ளது. வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன், கட்டுப்பாட்டுடன் வாகனம் ஓட்ட வேண்டும். நாங்களும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்விடத்திலும் விரைந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றனர்.