
நெல்லை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜெயக்குமார் மரணமடைந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லையாம். எல்லாக் கோணங்களிலும் விசாரித்தபோதிலும், வழக்கு அடுத்தகட்டத்துக்கு நகரவில்லையாம்.
அதனால், சந்தேக மரணமாகப் பதிவுசெய்யப்பட்ட அந்த வழக்கில், விரைவில் இறுதிக்கட்ட அறிக்கையை வெளியிடுவது தொடர்பாக நெல்லை சி.பி.சி.ஐ.டி போலீஸார் தலைநகர் உயரதிகாரிகளுடன் ஆலோசித்துவருகிறார்களாம். அந்த வகையில், வழக்கை `தற்கொலை’ என முடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் காக்கி வட்டாரத்தினர்!
பாகிஸ்தானுக்கு எதிரான `ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு ஆதரவாக, தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க சார்பில் பேரணி நடத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் நெல்லையில் நடந்த பேரணியில், அ.தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வுக்குத் தாவிய மாஜி மேயர் புள்ளி ஸ்கோர் செய்துவிட்டாராம். அவரின் செயலைத் தலைமையும் வெகுவாக பாராட்டியிருக்கிறதாம். இதனால் கடுப்பான பழைய நிர்வாகிகள், ‘நாம் பல வருடங்களாக கட்சிக்காக உழைக்கிறோம். ஆனால், அ.தி.மு.க-விலிருந்து நம் கட்சிக்கு வந்து, எதையாவது செய்து பெயர் வாங்கிவிடுகிறார்கள். நம் மாநிலத் தலைவரே அப்படி வந்தவர்தானே…’ என்கின்ற முணுமுணுப்பால், சூடாகியிருக்கிறது நெல்லை பா.ஜ.க கூடாரம்.
சூரியக் கட்சியின் நிகழ்ச்சிகளை, ஊரே வாய் பிளக்கும் அளவுக்கு பிரமாண்டமாக ஏற்பாடும் செய்யும் மாண்புமிகு, இப்போது ஏக வருத்தத்தில் இருக்கிறாராம். வரும் 2026 தேர்தலில், மண்டலப் பொறுப்பாளர்கள் பட்டியலில் தன் பெயர் இல்லாததுதான் அதற்குக் காரணமாம். ‘தனது மாவட்டத்தை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்பு தனக்குக் கிடைக்கும், அதன் மூலம் தலைமைக் கழகத்துக்குள் அடியெடுத்துவைக்கலாம்’ என்பதுதான் அவரது எண்ணமாக இருந்ததாம். ஆனால், மண்டலப் பொறுப்பு கிடைக்காத ஏமாற்றத்தில் ‘செலவு பண்ண மட்டும் நான் வேண்டும்… பதவி இன்னொருவருக்கா..?’ என தூங்காநகரில் நடைபெறவிருக்கும் கட்சியின் முக்கிய நிகழ்ச்சியை வேண்டா வெறுப்போடு ஏற்பாடு செய்கிறாராம்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை உலக நாடுகளுக்கு விளக்கும் பொருட்டு, ஏழு எம்.பி-க்கள் அடங்கிய குழுவை அமைத்திருக்கிறது மத்திய அரசு. `காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தலைமையிலான இந்தக் குழுவில் கனிமொழி இடம்பெற வேண்டும்’ என முதன்மையானவரிடமே நேரடியாக போனில் பேசினாராம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். அதைப் பெருமையாக முதன்மையானவரும் மற்றவர்களிடம் கூறி சிலாகித்துவருகிறராம்.
கட்சித் தலைமை அலுவலகத்தில் கனிமொழிக்குத் தனி அறை, மண்டலப் பொறுப்பாளர் பொறுப்பு, தற்போது எம்.பி-க்கள் குழுவில் இடமளிக்கப்பட்டிருப்பது எனத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், கனிமொழியின் ஆதரவாளர்கள் குஷியில் இருக்கிறார்கள்.
அமலாக்கத்துறையின் வேகத்தால் ரொம்பவே அதிர்ந்து போயிருக்கிறார்களாம் சீனியர் அமைச்சர்கள் சிலர். தலைநகர் மாண்புமிகுவுக்கு போன் போட்ட, ‘ஜோதி’ மாவட்ட மாண்புமிகு, ‘யோவ், அடுத்தது உன்கிட்டதான்யா வருவாங்க. ஜாக்கிரதையா இரு…’ என்றிருக்கிறார். இனிப்பு மாண்புமிகுவிடம், ‘உங்க டிபார்ட்மென்ட் டாக்குமென்ட்டெல்லாம் எக்கச்சக்கமா மாட்டியிருக்காம்ணே… சூதானமா இருங்க…’ என எச்சரித்திருக்கிறார்கள் சில எம்.எல்.ஏ-க்கள்.
இப்படித்தான் கடந்த சில நாள்களாக அடுத்து டான்ஜெட்கோ, உணவுத்துறை, பத்திரப்பதிவுத்துறை என்கிற ரெய்டு பட்டியலே அமைச்சர்களிடையே பேச்சாக இருக்கிறது. `எங்கு நம் துறைக்குள் அமலாக்கத்துறை புகுந்துவிடுமோ…’ என்ற கிலியில் பல அமைச்சர்கள் இருக்கிறார்களாம்.