
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவராக, தேசிய குழு உறுப்பினராக கே.முரளிதரன் மாநில தலைமையினால் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து மாநில தலைவராக பா.ஜ.க சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மாவட்டத்தின் மற்ற நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன்படி மாவட்ட துணை தலைவர்கள், மாவட்ட பொதுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொருளாளர் என 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் மட்டுமே பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இந்த நிர்வாகிகளில் 6 பேர், கட்சியின் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் மாவட்ட மையக் குழுவாகவும் செயல்படுவர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பட்டியல் இனத்தைச் சேர்ந்த 7 பிரிவினரை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பிரிவாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில் அத்தகைய அங்கீகாரத்தை பெற்ற தேவேந்திர குல வேளாளர் இனத்தை சேர்ந்த பா.ஜ.க-வினருக்கு கட்சிக்குள் மாவட்ட அளவிலான முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் பகுதிகளில் ”யார் அந்த சார்?” என்ற கேள்வியுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தேவேந்திரகுல வேளாளர் பொதுமக்கள் பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு மற்றும் முக்கிய பொறுப்புகளில் சேர விடாமல் தடுப்பது யார்? யார் அந்த சார்? என கேள்வி எழுப்ப பட்டுள்ளது.
மேலும் இந்த தவறை கட்சி தலைமை திருத்திக் கொள்ளவில்லை எனில் 2026 தேர்தலில் கட்சியின் நிலை கேள்விக்குறி என குறிப்பிடும் வகையில் தாமரை சின்னத்தின் மீது கேள்விக்குறி அச்சிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பெரும்பான்மை வாக்கு வங்கியாக உள்ள தேவேந்திரகுல இனம் புறக்கணிக்கப்படுவதாக பா.ஜ.க மீது எழுந்துள்ள புகார் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.