
தரமான கிராஃபிக்ஸில் கொண்ட பல கேம்கள் வெளியான பிறகும், க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ் கேம் இன்று வரை பலருக்கு பிடித்தமான ஒன்றாகத் திகழ்கிறது. போர், டவுன் ஹால் எனப் பல விஷயங்கள் பயனாளர்களை இன்றும் சுவாரஸ்யத்துடன் அதைத் தொடர்ந்து விளையாட வைக்கிறது.
நகரம் ஒன்றை உருவாக்கி அதைப் பாதுகாத்தும் பிறரது நகரத்தைத் தகர்த்தும் விளையாடும் இந்த கேமைப் பலரும் பல ஆண்டுகளாகப் பலரும் விளையாடி வருகின்றனர்.
க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ் என்பது ஒரு ஆன்லைன் கேம். சூப்பர்செல் (SUPERCELL) என்ற நிறுவனம் தயாரித்த இந்த கேமானது மொபைல் ஃபோன் மற்றும் லேப்டாப் இரண்டிலும் விளையாடக்கூடியது.
இந்த க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ் (CLASH OF CLANS) கேமை அடிப்படையாக வைத்து அனிமேட்டட் தொடர் ஒன்றை உருவாக்கப் போவதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது. இதற்கான பணிகள் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஒரு நாளில் 6.5 மில்லியன் பயனாளர்களால் இந்த கேம் விளையாடப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். மிகவும் பிரபலமான இந்த கேமை மையமாக வைத்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அனிமேட்டட் தொடரை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
“தீர்க்கமான முடிவுகொண்ட பார்பேரியன் (BARBARIAN) தன் கிராமத்தைக் காக்க புறக்கணிக்கப்பட்டவர்கள் சிலரை ஒன்று திரட்டி, வழிநடத்தும் அரசியல் போர் தான் கதை,” என்று அறிவித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ்.

பார்பேரியன் என்பது கேமில் வரும் ஒரு கதாபாத்திரம். இந்த அறிவிப்பு க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ் மற்றும் க்ளாஷ் ராயல் கேம் விளையாடுவோர் இடையே எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது.