• May 22, 2025
  • NewsEditor
  • 0

தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதில், “தங்க நகையின் மொத்த மதிப்பில் 75 சதவீதத்துக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.

அடமானம் வைக்கப்படும் தங்க நகை தங்களுடையதுதான் என்பதற்கான ஆதாரத்தை வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.

தங்கத்தின் தூய்மை தன்மை மற்றும் தரம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கி சான்றிதழ் வழங்கவேண்டும்..” உள்ளிட்ட கடுமையான 9 விதிமுறைகளை விதித்திருக்கிறது.

நகைக்கடன்

“இது அவசரத் தேவைக்கு கடன் வாங்கச் செல்லும் நடுத்தர மக்களை அலைக்கழிக்கும் சூழலை உருவாக்கும்” என பொருளாதார நிபுணர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன் எக்ஸ் பக்கத்தில், “தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி.

ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில், அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது.

குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும்.

ரிசர்வ் வங்கி

அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை, மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.

அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் RBI கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். RBI உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *