
புதுடெல்லி: ‘‘வக்பு என்பது இஸ்லாமிய கருத்தாக இருந்தாலும், அது இஸ்லாமின் அடிப்படையான பகுதியாகக் கருதப்படுவதில்லை. எனவே, அரசியல்சாசனப்படி அதை அடிப்படை உரிமையாக கோர முடியாது’’ உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று கூறியது.
வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த மாதம் ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து முக்கிய எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தன. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி ஏ.ஜி.மாஸி அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.