
உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பலம் கொண்ட தயாரிப்பு நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். சூப்பர்ஹீரோ திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற இந்நிறுவனத்தின் தயாரிப்பின் கீழ் வெளிவந்த பல திரைப்படங்கள் உலகம் முழுவதும் வசூல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளன.
அயர்ன் மேன் (‘Iron Man’)
2008-ம் ஆண்டு வெளிவந்த அயர்ன் மேன் (‘Iron Man’) திரைப்படத்தில் தொடங்கி பல திரைப்படங்கள் அடுத்தடுத்து தயாரித்து ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி முறையாக இதனை சினிமாட்டிக் யூனிவர்ஸாக கட்டமைத்து அதற்கு மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (MCU) என்று பெயரிடவும் செய்தனர்.
தி அவெஞ்சர்ஸ் (The Avengers)
ஒவ்வொரு சூப்பர்ஹீரோவையும் சரியாக அறிமுகப்படுத்தி, தனித்தனியே நின்ற ஹீரோக்களை குழுவாக இணைய செய்து ஒரு முக்கிய பிரச்னையை எதிர்கொள்ள செய்த படம்தான் தி அவெஞ்சர்ஸ் (The Avengers). இதுதான் MCU-வின் ஆறாவது படம்.
ஒரே படத்தில் பல்வேறு சூப்பர்ஹீரோக்கள்
2012-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில்தான் முதல் முறையாக பல்வேறு சூப்பர்ஹீரோக்கள் ஒரே படத்தில் இணைந்து குழுவாக கலக்கியிருந்தனர்.
கேப்டன் அமெரிக்கா, அயர்ன் மேன், ஹல்க், தோர், பிளாக் விடோ, ஹாக்-ஐ என ஆறு பேருடன் தொடங்கிய இந்த குழு அதன் பின் வெளிவந்த திரைப்படங்களில் இன்னும் பெரிதானது.
18 படங்களுக்குப் பிறகு அடுத்த முக்கிய மைல்கல்லாக 2018-ம் ஆண்டு அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் (Avengers: Infinity War) வெளிவந்தது.
அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் (Avengers: Endgame)
ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ், பிளாக் பேந்தர் போன்ற புதிய சூப்பர்ஹீரோக்கள் இணைந்து உலகத்தின் பாதி உயிர்களை அழித்தால் தான் சமநிலை இருக்கும் என மெகா வில்லன் தானோஸை எதிர்கொண்டனர்.
தானோஸ் அவர் இலக்கில் வெற்றி பெறும் வகையில் அந்த படம் நிறைவடைந்திருக்கும். உலகின் பாதி மக்கள் தொகை அழிக்கப்பட்டிருக்கும், சூப்பர் ஹீரோக்களும் அழிந்திருப்பார்கள். அடுத்து என்ன ஆகப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் (Avengers: Endgame).
டைம் ட்ராவல் மூலம் அனைத்தையும் மாற்றியமைக்கும் ஹீரோக்கள், பிறகு மொத்தமாக அதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து சூப்பர் ஹீரோக்களுடனும் இணைந்து தானோஸை வீழ்த்தும் இந்தப் படம் உலக பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டது. உலகம் முழுவதும் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என்ற சாதனையை செய்தது.

ஆனால், அங்குதான் மார்வெலின் சரிவும் தொடங்கியது. முடியாததை சாதித்து காட்டிய மார்வெலுக்கு அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை.
அதன் தாய் நிறுவனமான டிஸ்னி, இந்த ரசிகர்கள் பட்டாளத்தை பார்த்து தங்களது புதிய ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி ப்ளஸுக்கு ஏகப்பட்ட தொடர்களை புதிய மற்றும் ஏற்கெனவே இருக்கும் ஹீரோக்களை மையப்படுத்தி எடுக்க முடிவு செய்தது.
மல்டிவர்ஸ், மேஜிக், டைம் ட்ராவல் போன்ற சிக்கலான விஷயங்களையும் கையில் எடுத்தது. ஏகப்பட்ட கன்டென்ட் வெளியானதால் கதையை முழுவதுமாக பின்பற்ற முடியாமல் களைப்படைந்தனர் ரசிகர்கள்.
இது படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் வெளிப்பட்டன. Phase 4, Phase 5 இரண்டிலுமே ஒரு சில படைப்புகள் தவிர மார்வெலுக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை.

அடுத்த முக்கிய வில்லனாகப் படங்கள் மற்றும் சீரிஸ் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைக்கப்பட்ட கேங் (Kang) பாத்திரத்தில் நடித்த ஜோனாதன் மேஜர்ஸும் ‘குடும்ப வன்முறை’ வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பானதால் அவர் MCU-விலிருந்து நீக்கப்பட்டார். இதனால், மார்வெல் அனைத்தையும் மாற்றியமைத்து வேறொரு திசையை நோக்கிச் சென்றது.
இதன் விளைவாகத்தான் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ அறிவிக்கப்பட்டது. அயர்ன் மேனாக மார்வெல் ரசிகர்களைக் கவர்ந்த ராபர்ட் டவுனி ஜூனியர் டாக்டர் டூமாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.
மீண்டும் ரசிகர்களின் ஆர்வத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் மார்வெல் இருக்கும் இந்த நேரத்தில்தான் Phase 5-ன் கடைசி படமாக தண்டர்போல்ட்ஸ் வெளியாகியது.
ஹீரோக்களிலும் சேராத வில்லன்களிலும் சேராத ஜான் வாக்கர், ரெட் கார்டியன், எலினா, வின்டர் சோல்ஜர், டாஸ்க் மாஸ்டர், கோஸ்ட் போன்ற க்ரே ஷேட் கேரக்டர்களை வைத்து உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனம் பெற்று வருகிறது.

‘The New Avengers’
மார்வெல் படங்களில் ரசிகர்கள் மிஸ் செய்த சிம்பிள் விஷயங்களை சரியாக செய்திருந்தது இந்தப் படம்.
இது மீண்டும் மார்வெல் ரசிகர்களின் ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறது. அடுத்த ஆண்டு ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படம் வெளியாகவிருக்கும் நிலையில், சில முக்கிய ட்விஸ்ட்களையும் இந்தப் படத்தில் வைத்திருக்கிறார்கள்.
படத்தின் முடிவில் இவர்களை ‘The New Avengers’ என அறிவித்திருக்கிறார்கள். படத்தின் பெயரையும் அப்படியே மாற்றியிருக்கிறார்கள். ஒரிஜினல் அவெஞ்சர்ஸ் குழுவை மீண்டும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் சாம் வில்சன் (புதிய கேப்டன் அமெரிக்கா) இருக்க, அடுத்த பாகங்களில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
ஜூலை மாதம் வெளியாகும் ‘தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: தி ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கும் டாக்டர் டூம் கேரக்டர் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
