
திருவள்ளூர்: தெலுங்கு – கங்கை கால்வாய் மதகு சீரமைப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த கிருஷ்ணா நதி நீர், மீண்டும் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு இன்று (மே 21) காலை தமிழக எல்லையை வந்தடைந்தது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு ஆண்டு தோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என, 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை தமிழகத்துக்கு வழங்கவேண்டும். அந்த வகையில், ஆந்திர அரசு, சென்னையின் குடிநீர் தேவைக்காக ஜனவரி முதல் ஏப்ரல் வரை வழங்கவேண்டிய கிருஷ்ணா நதி நீரை வழங்கவேண்டும் எனக் கோரி, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினர்.