
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் பகுதியில் அமைந்திருக்கிறது மேலரசம்பட்டு கிராமம். வேலூர் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருக்கும் மின்கம்பம் சேதம் அடைந்து, கீழே சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலையில் இருப்பதனால், இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே, இந்த சாலையில் பயணிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பகலில் வெயிலும், இரவில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் மேலரசம்பட்டு, ஒடுகத்தூர் பகுதிகளில் சில மரங்கள் சாய்ந்தன. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பம் சேதம் அடைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் மின்வெட்டும் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய இப்பகுதி பொது மக்கள், “நேற்று பெய்த கனமழை காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் உள்ள மின் கம்பம் சேதம் அடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளது. சாலையில் செல்லும் பொழுது இந்த மின் கம்பம் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் பயணிக்க வேண்டியதாக உள்ளது. இது குறித்து மின் வாரிய அலுவலர்களிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பொது மக்களுக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பே, சாய்ந்த நிலையில் இருக்கும் இந்த மின் கம்பத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.” என்று கூறினர்.

இது குறித்து ஒடுகத்தூர் மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “மேலரசம்பட்டில் சாய்ந்த நிலையில் இருக்கும் மின் கம்பம் குறித்து தற்போதுதான் தகவல் கிடைத்துள்ளது. சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினர்.