• May 21, 2025
  • NewsEditor
  • 0

அனகாபுத்தூர் பகுதியில் அடையாறு ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் என அங்கு வசித்துவரும் மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு தமிழக அரசு இடித்து வருகிறது.

அரசின் இத்தகைய செயலுக்கு மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள், அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழக அரசு இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அனகாபுத்தூர்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அந்த அறிக்கையில், “அடையாறு நதியை சீரமைக்க தமிழ்நாடு அரசின் புதிய நிறுவனமான சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் (CRTCL) மூலம் ரூபாய் 1,500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தினை செயல்படுத்த நடப்பு ஆண்டில் தமிழக அரசு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடையாறு நதியை முழுவதுமாக புனரமைத்து கரையோரம் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை அறவே தடுத்து, நீர்வாழ் உயிரினங்கள் வாழும் சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றால், கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை மறுகுடியமர்வு செய்வது அவசியமாகும்.

இதன் ஒரு பகுதியாக அனகாபுத்துரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் 3வது தெரு ஆகிய இடங்களில் வசித்து வரும் 593 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலுர் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில் இலவசமாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட உள்ளன. (ஒரு வீடு 17 லட்சம் ; 390 சதுர அடி)

மேலும், அடையாறு ஆற்றங்கரையில் உள்ள ஜோதி ராமலிங்கம் நகர், திடீர் நகர், ஜோதி அம்மாள் நகர், சூர்யா நகர், மல்லிகைப்பூ நகர் ஆகிய 5 இடங்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு 390 சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக சுமார் ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

பயனாளிகளுக்கு குடும்பம் ஒன்றுக்கு இடமாற்றுப்படியாக ஒருமுறை ரூபாய் 5,000, வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூபாய் 2,500 என்ற அடிப்படையில் ஒரு வருடத்திற்கு ரூபாய் 30,000, மின்சார இணைப்புக் கட்டணம் ரூபாய் 2,500 என்ற அடிப்படையிலும் ஒவ்வொரு குடியமர்விற்கும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக விரிவான சமுதாய வளர்ச்சி திட்டங்கள், உடனடி குடும்ப அட்டை மாற்றம் செய்தல், விதவை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி சமூக பாதுகாப்பு திட்ட உதவி மாற்றம் செய்தல், கல்வி, அங்கன்வாடி, தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளி சேர்க்கை போன்ற அனைத்து திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

மாண்பமை உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஆற்றங்கரையில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மறு குடியமர்விற்கு ஒப்புதல் தராத ஆக்கரமிப்பாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனகாபுத்தூர்
அனகாபுத்தூர்

நதிநீர்சீரமைப்பு திட்டம் என்பதாலும், மழைக்கால வெள்ளத்தடுப்பு காரணங்களுக்காக ஆற்றங்கரையில் வசிக்கும் ஆக்கரமிப்பாளர்களை அரசு உரிய உதவிகளுடன் மறு குடியமர்வு செய்து வரும் அரசின் இந்த செயலுக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்று அரசு தெரிவித்திருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *